செயற்கைக்கோள் செலுத்த 'அக்னிகுல்' திட்டம் விண்வெளி துறையில் அதிக முதலீடு கிடைக்கும்
செயற்கைக்கோள் செலுத்த 'அக்னிகுல்' திட்டம் விண்வெளி துறையில் அதிக முதலீடு கிடைக்கும்
UPDATED : ஜூன் 02, 2024 03:37 AM
ADDED : ஜூன் 02, 2024 01:14 AM

சென்னை:இந்தியாவில் முதன்முறையாக, 'அக்னிகுல் காஸ்மோஸ்' என்ற தனியார் நிறுவனம் தன், 'அக்னிபான்' ராக்கெட்டை, சமீபத்தில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அந்நிறுவனம் ஓராண்டிற்குள் அதிக எடை உடைய ராக்கெட் வாயிலாக, செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தவும் திட்டமிட்டுள்ளது.
அதேபோல், பல நிறுவனங்களும் விண்வெளி துறையில் களமிறங்க தயாராகி வருகின்றன. இதனால், இந்தியாவில் விண்வெளி துறையில் அதிக முதலீடும், வருவாயும் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
நம்நாட்டில், 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் மட்டுமே, ராக்கெட் தயாரிப்பு, செயற்கைக்கோள் உருவாக்கம், ராக்கெட் வாயிலாக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் பணிகளை மேற்கொண்டு வந்தது.
உலகளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள், விண்வெளி துறையில் அதிக முதலீடுகளை ஈர்த்து வருகின்றன. எனவே, இந்திய விண்வெளி துறையில், தனியார் நிறுவனங்கள் களமிறங்க, மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இந்திய விண்வெளி துறையின் கீழ் செயல்படும், 'இன்ஸ்பேஸ்' எனப்படும், இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம், விண்வெளி துறையில், தனியார் நிறுவனங்கள் ஈடுபட ஆலோசனை மற்றும் அங்கீகாரம் அளிக்கிறது.
இதையடுத்து, விண்வெளி துறையில் ஈடுபட, 100 'ஸ்டார்ட் அப்' எனப்படும், புத்தொழில் நிறுவனங்கள் உட்பட, 150 நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளன.
சென்னை ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் உருவான, 'அக்னிகுல் காஸ்மோஸ்' என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தின், 'அக்னி பான்' ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா வில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, மே 30ம் தேதி காலை ஏவப்பட்டது.
இந்த ராக்கெட் திட்டமிட்டபடி வெற்றிகரமாக, 5.6 கி.மீ., சென்றது. இது, '3டி பிரின்ட்டட்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட முதல் ராக்கெட். மேலும், இதில் முதல் முறையாக, 'செமி கிரையோஜெனிக் இன்ஜின்' பயன்படுத்தப்பட்டு உள்ளது.
அத்துடன், விமான எரிபொருள், மண்ணெண்ணெய், திரவ ஆக்சிஜனை உள்ளடக்கியது.