மக்காச்சோளம் சாகுபடியை 2 மடங்கு அதிகரிக்க வேளாண் துறை முயற்சி; தேவை அதிகரிப்பால் தீவிரம்
மக்காச்சோளம் சாகுபடியை 2 மடங்கு அதிகரிக்க வேளாண் துறை முயற்சி; தேவை அதிகரிப்பால் தீவிரம்
ADDED : மார் 10, 2025 01:22 AM

சென்னை: மக்காச்சோளம் சாகுபடியை, ஒரே ஆண்டில் இரண்டு மடங்கு அதிகரிக்க, வேளாண் துறையினர் புதிய முயற்சி மேற்கொள்ள உள்ளனர்.
தமிழகத்தில், கோவை, ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், திருப்பூர் மாவட்டங்களில், மக்காச்சோளம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.
மூலப்பொருள்
தீவனம், சத்துமாவு, உணவு உள்ளிட்டவற்றின் தேவைக்காக, அவை பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது எரிபொருளில் கலந்து பயன்படுத்தப்படும் எத்தனால் தயாரிப்பதற்கும், மக்காச்சோளம் முக்கிய மூலப்பொருளாக உள்ளது.
மக்காச்சோளத்தை பயன்படுத்தி எத்தனால் தயாரிக்கும் தொழில்நுட்பம், தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. இதனால், மக்காசோளத்தின் தேவை அதிகரித்துள்ளது.
௧௦ லட்சம் ஏக்கர்
திருச்சி, பெரம்பலுார், சேலம், மதுரை, திருநெல்வேலி, கடலுார், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விருதுநகர், நாமக்கல், காஞ்சிபுரம், வேலுார், அரியலுார் மாவட்டங்களிலும், மக்காச்சோளம் சாகுபடி அதிகரித்து உள்ளது.
ஆண்டுக்கு, 10 லட்சம்ஏக்கரில், மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது.
இவற்றின் வாயிலாக, 29 லட்சம் டன் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. மாநிலத்தின் தற்போதைய தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, மக்காச்சோளம் உற்பத்தி இல்லை.
வரும் காலங்களில், தேவை மூன்று மடங்கிற்கு மேல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, 2025 - 26ம் ஆண்டு, முதற்கட்டமாக மக்காச்சோளம் சாகுபடியை, இரண்டு மடங்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
ஒரே ஆண்டில் இலக்கை அடைவதற்கு, பல்வேறு வியூகங்களை வேளாண் துறையினர் வகுத்துள்ளனர்.
இதுகுறித்து, வேளாண்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மக்காச்சோளம் சாகுபடி பரப்பை, 20 லட்சம் ஏக்கராக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக விதைப்பு முதல் அறுவடை வரை, பல்வேறு மானிய திட்டங்கள் அமலாக உள்ளன.
அறிவிப்பு
வேளாண் இயக்குநர் அலுவலகத்தில் உள்ளது போல, மாவட்ட அளவில், மக்காச்சோளம் சாகுபடியை மட்டும் கண்காணிக்க, குழுக்கள் நியமனம் செய்யப்பட உள்ளன.
இதுவரை மக்காச்சோளம், அதிகம் சாகுபடி செய்யாத மாவட்டங்களிலும், கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளது.
குறிப்பாக, தரமான விதைகளை வினியோகம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதுகுறித்த முறையான அறிவிப்பு, விரைவில் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.