கூட்டணி பலமும் இல்லாத நிலையில் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அ.தி.மு.க.,
கூட்டணி பலமும் இல்லாத நிலையில் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அ.தி.மு.க.,
ADDED : பிப் 25, 2025 06:50 PM
சென்னை:கடந்த 2019 லோக்சபா தேர்தல் முதல் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அ.தி.மு.க., தலைமை, இப்போது பலமுனைகளில் இருந்தும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது.
எம்.ஜி.ஆர்., தன்னுடைய ஆட்சி காலம் வரை, மத்தியில் ஆட்சியில் இருந்த இந்திரா, ராஜிவ் உடன் இணக்கமாகவே இருந்தார். ஜெயலலிதாவும் அதே நிலைப்பாட்டைதான் எடுத்தார். ஆனால், பா.ஜ., கூட்டணியில் தி.மு.க., இருந்தபோது, எதிர்கட்சியாக இருந்த காங்கிரசையும் ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.,வையும் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். மத்தியில் ஆளும் கட்சி, பிரதான எதிர்க்கட்சி இரண்டின் ஆதரவும் இல்லாததால், ஜெயலலிதா பல சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. மக்கள் செல்வாக்கால் அதையும் மீறி அவரால் வெல்ல முடிந்தது.
இப்போது ஆட்சியில் இல்லாத அ.தி.மு.க., மத்தியில் ஆளும் பா.ஜ.,வுடான உறவை முறித்துக் கொண்டுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரசுடன் தி.மு.க., கூட்டணி வைத்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளும், தி.மு.க., அணியில் உள்ளன.
இதனால், டில்லி அரசியலில் எந்த ஆதரவும் இன்றி, அ.தி.மு.க., தவிக்கிறது. பிரிந்து சென்றவர்களை சேர்த்து அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்க, பா.ஜ., தலைமை விரும்புகிறது. இதற்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மறுப்பதால், மத்தியில் அதிகாரத்தில் உள்ள பா.ஜ.,விடம் இருந்து, பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கிறது.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், பழனிசாமி உறவினர்கள் வீடுகளில் வருமான வரி, அமலாக்கத் துறை சோதனை நடந்தது. மீண்டும் அதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரமும் தேர்தல் ஆணையத்திடம் சென்றுள்ளது.
இந்நிலையில்தான், பழனிசாமி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான கோவை வடக்கு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உள்ளிட்ட விவகாரங்களால், தி.மு.க., அரசிடம் இருந்து ஏற்கனவே அ.தி.மு.க., நெருக்கடியை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழனிசாமிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான், 'இன்னும் எங்களை எதிர்த்து எதுவரினும், எவர்வரினும் அஞ்சாது எதிர்கொள்வோம்' என, பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, 'தமிழகத்திலும் ஆட்சியில் இல்லை. டில்லியிலும் பகை. 1977ல் பிரதமராக இருந்த மொரார்ஜியின் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால், தஞ்சை இடைத்தேர்தலில் இந்திரா போட்டியிட விரும்பியும் அதை மறுத்தார்; அதை எம்.ஜி.ஆர்., ஏற்கவில்லை. அதே நேரம், கருணாநிதி பா.ஜ.,வை எதிர்த்தாலும், 'சேற்றில் மலர்ந்த செந்தாமரை' என வாஜ்பாய் உடன் நட்பில் இருந்தார். ஆனால், இப்போது மத்திய அரசை மட்டுமல்ல, அனைவரையும் பழனிசாமி எதிர்க்கிறார். இதனால் அவர் மட்டுமல்ல, அ.தி.மு.க.,வும் நெருக்கடியை சந்திக்கிறது' என்றனர்.

