'ஸ்மார்ட் மீட்டர்' திட்ட மானியம்: மின் வாரியத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை
'ஸ்மார்ட் மீட்டர்' திட்ட மானியம்: மின் வாரியத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை
UPDATED : செப் 04, 2024 05:55 AM
ADDED : செப் 04, 2024 01:43 AM

சென்னை: 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை விரைந்து செயல்படுத்தவில்லை எனில், மறுசீரமைப்பு திட்டத்திற்கான மானியம் வழங்கப்படாது என்று, தமிழக மின் வாரியத்திடம், மத்திய மின் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுதும் மறுசீரமைக்கப்பட்ட மின் பகிர்மான திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மின் இழப்பை பூஜ்ஜியமாக குறைக்க, புதிய மின் வழித்தடம் அமைக்கப்பட வேண்டும்.
மேலும், மின்சாரம் விற்பனைக்கு ஏற்ப வருவாய் கிடைப்பதை உறுதி செய்ய, டிரான்ஸ்பார்மர், மின் வழித்தடங்களில், ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும்.
மறுசீரமைப்பு திட்டத்தை, தமிழகத்தில், 10,600 கோடி ரூபாயில் மேற்கொள்ள, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், மத்திய அரசு, 6,360 கோடி ரூபாய் கடன் வழங்குகிறது.
இந்த நிதியாண்டிற்குள் திட்ட பணிகளை முடித்து விட்டால், மத்திய அரசு தரும் கடனை திரும்ப செலுத்த தேவையில்லை. அந்த கடன் மானியமாகி விடும். இல்லையெனில் வட்டியுடன், கடனை திரும்ப செலுத்த வேண்டும்.
வீடு, வணிக நிறுவனங்களில் துல்லியமாக மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, ஆளில்லாமல் தொலைத்தொடர்பு வசதியுடன் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக மின் வாரியம், 3 கோடி மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த உள்ளது. இதற்காக மீட்டர் பொருத்தும் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, கடந்த ஆண்டில், 'டெண்டர்' கோரப்பட்டது. இதுதொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், 'ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும்; தாமதம் செய்தால் மறுசீரமைப்பு திட்டத்திற்கான மானியம் வழங்கப்படாது' என்று மின் வாரியத்திடம், மத்திய அரசு தெரிவித்துள்ளது.