'பாசியில் இருந்து தடையற்ற மின்சாரம் தயாரிக்கலாம்': தமிழ் விஞ்ஞானியின் சாதனை
'பாசியில் இருந்து தடையற்ற மின்சாரம் தயாரிக்கலாம்': தமிழ் விஞ்ஞானியின் சாதனை
UPDATED : ஜூன் 25, 2024 05:17 PM
ADDED : ஜூன் 25, 2024 03:42 AM

''கடந்த, 2007ல் இந்த புதிய ஐடியா வந்தது. இன்றைக்கு, பல்வேறு புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி முறைகள் தேவைப்படுகின்றன. உலகம் முழுதும், வழக்கமான மின்சார உற்பத்தி முறைகளால், எக்கச்சக்கமான மாசு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும், தமிழகத்திலும் கூட, இந்த மாசுபாடுகளால் பெரிய பாதிப்புகள். மக்களுடைய சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
''இதையெல்லாம் மாற்றுவதற்கான ஒரு வழி கிடைத்தபோது, மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது,'' என்று, நம் நிருபரிடம் பேசத் துவங்கினார் 'மைக்ரோ நானோ' தொழில்நுட்ப விஞ்ஞானியான முத்துக்குமரன். தமிழகத்தைச் சேர்ந்த இவர் தற்போது, கனடா நாட்டு கன்கார்டியா பல்கலையில் பேராசிரிய ராக உள்ளார்.
அவர் கூறியதாவது:
அதாவது, ஒளிச்சேர்க்கையின் மூலம் பாசிகள் தங்களுக்கான உணவை உற்பத்தி செய்துகொள்கின்றன. சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் ஒளியே இதற்கு அடிப்படை. ஒருசெல் உயிரிகளான பாசிகள், இந்தப் பூமியெங்கும் உள்ளன.
அவற்றில் எண்ணற்ற வகைகள் இருப்பினும், அவை தமக்கான உணவை உற்பத்தி செய்துகொள்ளும் முறை ஒன்று தான். அது ஒளிச்சேர்க்கை. இந்த நடைமுறையில் அவை தொடர்ச்சியாக 'எலக்ட்ரான்'களையும் உற்பத்தி செய்கின்றன. இந்த எலக்ட்ரான்களை வலைபோட்டு சேகரித்தால், அதைக் கொண்டு மின் உற்பத்தி செய்ய முடியும் என்பது தான் என் கண்டுபிடிப்பு.
இதற்காக, 2 x 2 அங்குல, சிறு சிறு பாசி குட்டைகளை உருவாக்கினேன். அதில், எலக்ட்ரான்களைச் சேகரிக்கவல்ல, 'மைக்ரோ எலக்ட்ரோடு' வலையைப் பொருத்தினேன். இதன் வாயிலாக, எலக்ட்ரான்கள் சேகரிக்கப்பட்டன. பாசிகள் பகலிலும் இரவிலும் தம் வேலையைச் செய்தன.
அப்போது உருவான எலக்ட்ரான்களைச் சேகரித்து, எலக்ட்ரோடுகள் வாயிலாக, வெளியே எடுத்து மின் உற்பத்தி செய்யத் துவங்கினேன்.
பாசிகள், பகலில் ஒளிச்சேர்க்கை செய்யும்; இரவில் 'ரெஸ்பிரேஷன்' செய்யும். அதாவது, மாடுகள் எப்படி சாப்பிட்ட பின்னர் இரவில் அசைபோடுமோ, அதுபோல், பகலில் ஒளிச்சேர்க்கையின் போது சேகரிக்கப்பட்ட உணவை, பாசிகளும் பின்னர் இரவில் அசை போடும்.
முழுமையான சோதனை
அப்போதும் எலக்ட்ரான்கள் உற்பத்தி ஆகும். அதையும் இதேமுறையில் சேகரித்தோம். இதன் வாயிலாக, பகலில் மட்டுமல்ல, இரவிலும் தொடர்ச்சியாக மின் உற்பத்தி செய்ய முடிந்தது.
கடந்த, 2007ல் ஒரு ஐடியாவாக உருவான இந்த புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றல் உற்பத்தி முறையை, நடைமுறையில் செய்து பார்த்து, நிரூபிப்பதற்கு இத்தனை ஆண்டுகள் ஆயின. இப்போது, இதை முழுமையாக சோதித்துவிட்டோம். எண்ணற்ற பாசி குட்டைகளை அடுத்தடுத்து பொருத்தி, அவற்றை ஒருங்கிணைத்தால், தொடர்ச்சியாக மின் உற்பத்தி நடந்துகொண்டே இருக்கும்.
பாசி பேனல்கள்
எப்படி சோலார் பேனல் தகடுகள் உள்ளனவோ, அதுபோல் பச்சை பாசி பேனல்களை உருவாக்க முடியும். இந்த பேனல்கள் வெளியே பார்ப்பதற்கு பச்சை பசேல் என்று இருக்கும். ஆனால், அவை மின் உற்பத்தி செய்துகொண்டே இருக்கும். இந்த பேனல்களை வீட்டின் மொட்டை மாடியில் வைக்கலாம்.
இதையே வேறு சில விதமாக மாற்றி, வீட்டின் வெளிப்புற சுவர்களிலும், கண்ணாடிகளிலும் பொருத்தலாம். ஒரு பக்கம் மின் உற்பத்தி நடக்கும். மறுபுறம், அந்தக் கட்டடமே வெப்பம் குறைந்து, குளிர்ச்சி யாகவும் மாறும். பல்வேறு வண்ணப் பாசிகள் உள்ளன.
அதனால், பச்சை வண்ணம் மட்டுமல்ல; பல வண்ண பாசி பேனல்களையும் உருவாக்க முடியும். 20 நாட்களுக்கு ஒருமுறை பாசிகளை மாற்ற வேண்டும். அதற்கான வழிமுறையையும் உருவாக்கியுள்ளோம்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முறைகளில், பாசிகளைப் பயன்படுத்துவது என்பது, இயற்கைக்கு எந்தவிதத் தீங்கையும் விளைவிக்காது. பாசிகளுக்கும் குறைவிருக்காது. எல்லாருக்கும் எல்லா காலத்துக்கும் பொருத்தமான மின் உற்பத்தி முறையாக இந்த முறை இருக்கும்.
இவ்வாறு முத்துக்குமரன் (மைக்ரோ நானோ விஞ்ஞானி) கூறினார்.
சோலார் பேனல் தகடுகளைப் போல், பச்சை பாசி பேனல்களையும் உருவாக்க முடியும். இவற்றை வீட்டின் மொட்டை மாடியில் வைத்து மின்சாரம் தயாரிக்கலாம்
- நமது நிருபர் -