சசிகலாவை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா?: சீமான் கேள்வி
சசிகலாவை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா?: சீமான் கேள்வி
ADDED : ஏப் 01, 2024 06:27 PM

தேனி: சசிகலாவை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா? என டிடிவி தினகரனுக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சீமான் வேட்பாளர் மருத்துவர் மதன் ஜெயபாலனுக்கு ஆதரவாக, தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது:
சசிகலாவை நான்கரை ஆண்டுகள் சிறையில் வைத்தவர்கள் யார்?. உங்களை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா?. சசிகலா பதவியேற்பதை தடுக்க 22 நாட்கள் தாமதப்படுத்தியது யார்?. சசிகலா வழக்கை அவசரமாக விசாரித்து தண்டனை வழங்கியது யார்?. பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு சசிகலா கூறியவுடன் அவசரமாக விசாரிக்க சொன்னது யார்?.
எனக்கு மிரட்டல்
சசிகலா குடும்பத்தில் நிகழ்ந்த அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் பா.ஜ., தான். டிடிவி தினகரன், சசிகலா பிரச்னையில் இருந்த போது தமிழகத்தில் குரல் கொடுத்த ஒரே ஆள் நான். இரட்டை இலை சின்ன வழக்கில் கைதானவர் இன்னும் சிறையில் இருக்கிறார். என்னை மிரட்டி பார்த்தார்கள், நான் சமரசம் ஆகவில்லை, சரணடையவில்லை.
குக்கர் சின்னம் எப்படி?
விவசாயி சின்னத்தை முடக்கி விட்டார்கள் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் எனக் கூறுகிறார்கள். இப்பொழுது அமமுக.,வுக்கு குக்கர் சின்னம் எப்படி வந்தது. நீங்கள் முதலில் போய் கேட்டீர்களா?. நீங்கள் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தால் சின்னம் கிடைக்கிறது. எனது சின்னத்தை வேற ஒருவருக்கு கொடுத்துள்ளார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.

