சவுதி சிறையில் வாடும் கைதிக்கு துாதரக உதவி: மத்திய அரசு தகவல்
சவுதி சிறையில் வாடும் கைதிக்கு துாதரக உதவி: மத்திய அரசு தகவல்
ADDED : செப் 05, 2024 12:20 AM
சென்னை:சவுதி அரேபியா சிறையில் வாடும், மரண தண்டனை கைதிக்கு தேவையான துாதரக ரீதியிலான உதவிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடலுார் மாவட்டம், பெரியகோட்டுமுளையைச் சேர்ந்த சரோஜா என்பவர் தாக்கல் செய்த மனு:
என் மகன் பரதன் பாண்டுரங்கனுக்கு, கொலை வழக்கில் சவுதி அரேபியா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 16 ஆண்டுகளுக்கும் மேல், சவுதி சிறையில் உள்ளார்.
நடவடிக்கை இல்லை
பொது மன்னிப்பு திட்டத்தில், 2015ல் அவரது விடுதலை குறித்து பரிசீலிக்கப்பட்டது. சவுதி அரேபியா நீதிமன்ற தீர்ப்பின்படி, உயிரிழந்தவரின் வாரிசுகள் மன்னித்தால், என் மகனை காப்பாற்றலாம். ஆனால், உயிரிழந்தவரின் குடும்பம், கேரளாவில் உள்ளது.
சட்ட உதவி வழங்க, என் மகனுக்கு யாரும் இல்லை. சிறையில் உள்ள மகனை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய, மாநில அரசுகளுக்கு கடந்த மார்ச்சில் மனு அனுப்பினேன்; எந்த நடவடிக்கையும் இல்லை.
மனு மீது நடவடிக்கை எடுக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சிவஞானம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், 'சிறை கைதிகளை பரஸ்பரம் மாற்றி கொள்ளும் ஒப்பந்தம், இந்தியா-, சவுதி அரேபியா இடையே உள்ளது. எனவே, பாண்டுரங்கனை இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம்' என தெரிவிக்கப்பட்டது.
உத்தரவிட முடியாது
மத்திய வெளியுறவுத் துறை சார்பில், 'பாண்டுரங்கனுக்கு தேவையான துாதரக ரீதியிலான உதவிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. விடுதலை பெறுவது தொடர்பாக உயிரிழந்தவரின் வழக்கறிஞர்களை அணுகலாம்' என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 'சிறை கைதிகளை பரஸ்பரம் மாற்றிக் கொள்வது தொடர்பாக, இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் இருந்தாலும், அதை செயல்படுத்த உத்தரவிட முடியாது.
'இது தொடர்பாக நிவாரணம் பெற, மனுதாரர் தரப்பு வெளியுறவுத் துறை அமைச்சகத்தை அணுகலாம்' என கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.