ADDED : மே 30, 2024 01:34 AM
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில், சில தினங்களுக்கு முன், வைகாசி விசாகத்தை ஒட்டி தேர் திருவிழா நடந்தது. அங்கு ஊர்காவல் படையை சேர்ந்த அருள்ஜோதி, முகிலன், அர்ஜுனன் மற்றும் பெண் போலீசார், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக சென்ற இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, தேர் திருவிழா நடப்பதால், மாற்றுப் பாதையில் செல்லுமாறு கூறினர். அதே பகுதியைச் சேர்ந்த விஜய், தாமரைக்கண்ணன் ஆகியோர், போலீசார் மற்றும் ஊர்காவல் படையினரை கையால் தாக்கி தகராறு செய்தனர்.
இதனால், இருவரும் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து, சமூக வலைதளத்தில், கஞ்சா போதையில் வாலிபர்கள், போலீசார் மீது தாக்குதல் நடத்துவதாக தகவல் பரப்பப்படுகிறது. வதந்தி பரப்பியவர்கள் குறித்து தகவல் சேகரித்து, நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும், இதுபோன்ற உண்மைக்கு மாறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- சங்கர் ஜிவால்
போலீஸ் டி.ஜி.பி.,