இரும்பு வியாபாரியை காரில் கடத்தி நிர்வாணமாக்கி ரூ.13 லட்சம் பறிப்பு
இரும்பு வியாபாரியை காரில் கடத்தி நிர்வாணமாக்கி ரூ.13 லட்சம் பறிப்பு
ADDED : செப் 03, 2024 01:08 AM
கானத்துார்: மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மைதீன் ராஜா, 44; இரும்பு வியாபாரி.இவர், கானத்துார் போலீசில், நேற்று ஒரு புகார் அளித்தார். புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
நண்பர்கள் வழியாக, 2019ம் ஆண்டு லுாட்வின் ராஜ், 40, என்பவர் அறிமுகமானார். அவருடன் சேர்ந்து இரும்பு வியாபாரம் செய்தேன்.
என் மகனை மருத்துவ படிப்பில் சேர்க்க 'சீட்'டிற்கு அலைந்த போது, தனியார் மருத்துவக் கல்லுாரியின் உரிமையாளர் தனக்கு நல்ல பழக்கம் எனக் கூறி, அவரிடம் பேசி மருத்துவ சீட் வாங்கித் தருவதாக லுாட்வின் ராஜ் கூறினார்.
இரு நாட்களுக்கு கானத்துார் அழைத்து சென்றார்.
அங்கிருந்து கல்லுாரிக்கு அழைத்துச் செல்வதாக கூறி, ஒரு காரில் 5 பேர் சேர்ந்து என்னை கடத்திச் சென்றனர்.
என் வங்கி கணக்கில் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட அவர்கள், என்னை தாக்கி 'ஜி-பே' வாயிலாக 10 லட்சம் ரூபாயை, லுாட்வின் ராஜ் வங்கி கணக்கிற்கு அனுப்பினர்.
பின், செங்கல்பட்டு மாவட்டம், ஓதியூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து நிர்வாணமாக்கி, மீண்டும் 3.60 லட்சம் ரூபாய் பறித்தனர்.
என்னிடமிருந்த காசோலைகளையும், கையெழுத்து போட்டு பெற்றுக் கொண்டனர். சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.