ஒவ்வொரு சாவடி வாரியாக ஓட்டுப்பதிவு வெளியீடு யாருக்கு சாதகம் என ஆய்வு
ஒவ்வொரு சாவடி வாரியாக ஓட்டுப்பதிவு வெளியீடு யாருக்கு சாதகம் என ஆய்வு
ADDED : ஏப் 25, 2024 02:08 AM

சென்னை: தமிழகத்தில், 15 சட்டசபை தொகுதிகளில், 80 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகள் பதிவாகி உள்ளன. ஓட்டுச்சாவடி வாரியாக பதிவான ஓட்டுகள் அடிப்படையில், எந்த வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு என, அரசியல் கட்சிகள் கணக்கிட்டு வருகின்றன.
தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும், கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்தது.
குறைவான ஓட்டுகள்
இதில் தர்மபுரி லோக்சபா தொகுதியில் மட்டும், 80 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகள் பதிவாகின.
தென் சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில், 60 சதவீதத்திற்கும் குறைவான ஓட்டுகள் பதிவாகின.
லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட, 234 சட்டசபை தொகுதிகளில், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டசபை தொகுதியில் அதிகபட்சமாக, 84.94 சதவீத ஓட்டுகள் பதிவாகிஉள்ளன.
மொத்தம் 15 சட்டசபை தொகுதிகளில், ஓட்டுப்பதிவு 80 சதவீதத்தை தாண்டி உள்ளது.
வெற்றி வாய்ப்பு
மேலும், 48 சட்டசபை தொகுதிகளில், 75 முதல் 80 சதவீதம்; 69 தொகுதிகளில் 70 முதல் 75 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன; 25 தொகுதிகளில், 60 சதவீதத்திற்கும் குறைவாகவும், மற்ற தொகுதிகளில், 60 முதல் 70 சதவீத ஓட்டுகளும் பதிவாகி உள்ளன.
ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், ஓட்டுச்சாவடி வாரியாக பதிவான ஓட்டுகள்; ஆண்கள், பெண்கள் மொத்த ஓட்டு, பதிவான ஓட்டுகள் விபரம் வெளியாகி உள்ளன. அவற்றின் அடிப்படையில், எந்த வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என, அரசியல் கட்சிகள் கணக்கிட்டு வருகின்றன.

