ஆங்கிலத்திற்கு மாறிய பஸ் குறிப்பேடு அரசுக்கு அன்புமணி, தினகரன் கண்டனம்
ஆங்கிலத்திற்கு மாறிய பஸ் குறிப்பேடு அரசுக்கு அன்புமணி, தினகரன் கண்டனம்
ADDED : பிப் 27, 2025 07:07 PM
சென்னை:சென்னை மாநகர பஸ்களின் குறிப்பேடுகளை, தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மாற்றியிருப்பது குறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. அரசின் இந்த செயல்பாட்டிற்கு பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
* அன்புமணி:
சென்னை மாநகர பஸ்களின் செயல்பாடுகள் குறித்த குறிப்புகளை பதிவு செய்வதற்கான வண்டி குறிப்பேடு, இதுவரை தமிழில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அதை இப்போது ஆங்கிலத்தில் மாற்றியுள்ளனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
கடந்த 1956ல் நிறைவேற்றப்பட்ட தமிழ் ஆட்சிமொழி சட்டத்தின்படி, அரசின் ஆவணங்கள், படிவங்கள் அனைத்தும் தமிழில் தான் இருக்க வேண்டும். பஸ்களுக்கான படிவங்களை ஆங்கிலத்தில் மாற்றுவது, தமிழுக்கு இழைக்கப்படும் துரோகம். தமிழகத்தில் அன்னைத் தமிழுக்கு இடமளிக்க மறுப்பதை ஏற்க முடியாது. எனவே, பஸ் குறிப்பேட்டை தமிழுக்கு மாற்ற வேண்டும். ஒரு பக்கம் ஹிந்தியை எதிர்ப்பதாக நாடகமாடும் தி.மு.க., அரசு, இன்னொரு பக்கம் தமிழை அழிக்கவும் பாடுபட்டு கொண்டிருக்கிறது என்பதற்கு மாநகர பஸ்களின் குறிப்பேடுகளை ஆங்கிலத்தில் அச்சிட்டிருப்பதே சான்று.
* தினகரன்:
சென்னை அரசு பஸ்களின் வழித்தட எண், புறப்படும் நேரம், பழுதுகள், குறைபாடுகள் உள்ளிட்டவற்றை குறிப்பிடும், வாகன குறிப்பேடு படிவம், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஹிந்திக்கு எதிராக, மேலும் ஒரு மொழிப்போரை சந்திக்க தயாராக இருப்பதாக, வீர வசனம் பேசும் முதல்வர் ஸ்டாலின், தமிழகத்திலேயே. தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு, என்ன பதில் சொல்லப் போகிறார்?
வாகன குறிப்பேடுகளை கூட, தமிழில் வழங்க முடியாத தி.மு.க., ஹிந்திக்கு எதிராக, தமிழ் காக்கும் அறப்போரில் பங்கேற்க, பொது மக்களை அழைப்பது முழுக்க முழுக்க ஏமாற்றும் செயல்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.