'ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்த 50 சதவீத செலவை ஏற்க வேண்டும்' அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
'ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்த 50 சதவீத செலவை ஏற்க வேண்டும்' அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
ADDED : மார் 09, 2025 01:19 AM

சென்னை: 'ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்த, 50 சதவீத செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
கர்நாடகாவில் நடந்து வரும் ரயில் பாதை திட்டங்களை விரைவுபடுத்த, அதற்கான செலவில் 50 சதவீதத்தை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
இதனால், கர்நாடகாவில் ரயில் பாதை திட்டப் பணிகள் முன்கூட்டியே முடிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10 புதிய ரயில் பாதைகள் உட்பட 22 திட்டங்கள், 33,467 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றுக்கு கடந்த ஆண்டு மார்ச் வரை, 7,154 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. 2025 - -26ல் தமிழக ரயில் பாதை திட்டங்களுக்கு, 1,536 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு, 8,254 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், 2,170 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தி தரப்பட்டுள்ளது.
இதே நிலை நீடித்தால், இன்னும் 25 ஆண்டுகள் ஆனாலும் கூட, தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற முடியாது.
தமிழக ரயில் பாதை திட்டங்களை விரைந்து முடிக்க, அதற்கான செலவில் 50 சதவீதத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.