ரூ.129 கோடி தந்தால் கிருஷ்ணா நீர்; தமிழகத்திடம் ஆந்திர அரசு கறார்!
ரூ.129 கோடி தந்தால் கிருஷ்ணா நீர்; தமிழகத்திடம் ஆந்திர அரசு கறார்!
UPDATED : ஜூலை 03, 2024 03:38 AM
ADDED : ஜூலை 02, 2024 09:35 PM

சென்னை:'கிருஷ்ணா கால்வாய் பராமரிப்பு கட்டண நிலுவைத்தொகை, 129 கோடி ரூபாயை விடுவித்தால், தமிழகத்திற்கு நீர் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும்' என, ஆந்திர அரசு கறாராக கூறியுள்ளது.
தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே, 1983ல் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, ஆண்டுதோறும், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, சென்னையின் குடிநீர் தேவைக்கு ஆந்திர அரசு வழங்க வேண்டும். இரண்டு தவணைகளாக, கிருஷ்ணா நீரை வழங்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
முறைப்படி தருவதில்லை
அதன்படி, ஜூலை முதல் அக்டோபர் வரையிலான முதல் நீர் வழங்கும் காலத்தில், 8 டி.எம்.சி.,யும்; ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான இரண்டாம் நீர் வழங்கும் காலத்தில் 4 டி.எம்.சி.,யும் நீர் திறக்க வேண்டும்.
ஆனால், இந்த நீரை ஆந்திரா முறைப்படி வழங்குவது கிடையாது.
இதுவரை, 112 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. கிருஷ்ணா கால்வாய் பராமரிப்பு கட்டணத்தை, ஆந்திராவுடன் தமிழக அரசும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அதன்படி, தமிழகம், 1,261 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என, ஆந்திர தரப்பில் கேட்கப்பட்டது. இதுவரை, 1,132 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கியுள்ளது.
இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான முதல் நீர் வழங்கும் தவணைக்காலம், 1ம்தேதி முதல் துவங்கியுள்ளது.
நீர் இருப்பு குறைவு
ஆனால், 68 டி.எம்.சி., கொள்ளளவு உடைய கண்டலேறு அணையில், 6.32 டி.எம்.சி., மட்டுமே நீர் உள்ளது. மஹாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தால், கண்டலேறு அணைக்கு கிருஷ்ணா நீர் வரத்து அதிகரிக்கும்.
அணை நிரம்பினால், ஆந்திராவின் பாசனத்திற்கு மட்டுமின்றி தமிழகத்திற்கும் நீர் திறக்கப்படும்.
அவ்வாறு, தமிழகத்திற்கு நீர் திறக்க வேண்டும் என்றால், கிருஷ்ணா கால்வாய் பராமரிப்பு கட்டண நிலுவைத் தொகையான, 129 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என, ஆந்திர அதிகாரிகள் கறாராக கூறியுள்ளனர்.
இப்பிரச்னையை, தமிழக நீர்வள துறையினர், நிதித்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.