தமிழக சட்டம்--ஒழுங்கு பிரச்னை கடுமையாக விமர்சிக்கும் அண்ணாமலை
தமிழக சட்டம்--ஒழுங்கு பிரச்னை கடுமையாக விமர்சிக்கும் அண்ணாமலை
ADDED : ஆக 03, 2024 09:14 PM
சென்னை:'சட்டம் - ஒழுங்கை காக்க இனியும் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழக அரசியல் வரலாற்றில் ஸ்டாலின் கையாலாகாத முதல்வர் என்றே அறியப்படுவார்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கோவையில் வழக்கறிஞர் உதயகுமார் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கொலைகள் சர்வ சாதாரணமாகி இருக்கின்றன. சட்டம் - ஒழுங்கு தன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று உறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், இதுகுறித்து எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாக தெரியவில்லை.
மாறாக அமைச்சர்கள், 'கொலைகள் நடக்கத்தான் செய்யும்' என்ற ரீதியில் பேசுவது ஏற்கத்தக்கதல்ல.
ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் துவங்கி, தி.மு.க., கூட்டணி கட்சியான காங்கிரஸ் மாவட்ட தலைவர், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என, யார் உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை, தமிழகத்தில் நீடிப்பது அச்சத்திற்கு உரியது.
சமூக வலைதளங்களில், தி.மு.க., அரசின் தவறை விமர்சிப்பவர்களை கைது செய்வதற்கு மட்டுமே போலீசார் பயன்படுத்தப்படுகின்றனர். காவல் துறையின் முக்கிய கடமையான சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து கிடப்பது, அரசியல் கடந்து வருந்தத்தக்கது.
காவல் துறைக்கு பொறுப்பான முதல்வர் ஸ்டாலின், சட்டம்-ஒழுங்கை காக்க இனியும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால், தமிழக அரசியல் வரலாற்றில் கையாலாகாத முதல்வர் என்றே அறியப்படுவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.