விருதுநகர் கலெக்டருக்கு மேலும் ஒரு விருது அறிவிப்பு
விருதுநகர் கலெக்டருக்கு மேலும் ஒரு விருது அறிவிப்பு
ADDED : ஆக 15, 2024 01:50 AM

விருதுநகர்:விருதுநகர் கலெக்டர் ஜெயசீலனுக்கு ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக பணியாற்றியதற்கு விருது அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது உயர்கல்வியில் அதிக மாணவர்களை சேர்த்ததற்கான நல்லாளுமை விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் கலெக்டராக ஜெயசீலன் 2023 ஜனவரி முதல் பணியாற்றி வருகிறார். இவர் 2023 கலெக்டர் மாநாட்டில் கல்வியில் சிறப்பாக பணிபுரிந்த கலெக்டருக்கான விருது வழங்கப் பட்டது. சமீபத்தில் 2024 சுதந்திர தின விழா விருதுகள் அறிவிக்கப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர் கூட்டம், வேலைவாய்ப்பு முகாம் நடத்தி பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்ததற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை ஆற்றிய கலெக்டர் என்ற விருது இவருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் உயர்கல்வியில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்தியதற்காக நல்லாளுமை விருதும் கலெக்டர் ஜெயசீலனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டராக பொறுப்பேற்ற பின் ஜெயசீலன் 2 ஆண்டுக்குள் அடுத்தடுத்து மூன்று விருதுகள் பெறுவது குறிப்பிடத்தக்கது.