பொன்மாணிக்கவேலுக்கு முன்ஜாமின்: உயர்நீதிமன்றம் அனுமதி
பொன்மாணிக்கவேலுக்கு முன்ஜாமின்: உயர்நீதிமன்றம் அனுமதி
ADDED : ஆக 30, 2024 11:00 PM

மதுரை : சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக சி.பி.ஐ., பதிந்த வழக்கில் முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனை முன்ஜாமின் அனுமதித்தது.
தமிழக காவல் துறையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பொன் மாணிக்கவேல் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். பணிக்காலத்தில் சிலை கடத்தல்காரர் தீனதயாளனை கைது செய்தார். அவரது வாக்குமூலம் அடிப்படையில் திருவள்ளூரில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த காதர் பாஷா மற்றும் கோயம்பேடு போலீசில் சிறப்பு எஸ்.ஐ.,யாக இருந்த சுப்புராஜ் ஆகியோர் 2017ல் பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இருவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். பின் ஜாமினில் வெளியே வந்தனர்.
காதர் பாஷா, ''தீனதயாளனுக்கு ஆதரவாக பொன்மாணிக்கவேல் செயல்பட்டார். அவரை வழக்கு ஒன்றில் தப்பிக்க வைக்க என் மீது பொய் வழக்கு பதிந்தார். விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,'' என, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். சி.பி.ஐ., வழக்கு பதிந்து விசாரிக்க அந்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சி.பி.ஐ.,யினர் பொன்மாணிக்கவேல் மீது வழக்கு பதிந்தனர். அவர், ''இதை சி.பி.ஐ.,விசாரிக்க அதிகாரமில்லை. உள்நோக்கில் சட்டவிரோதமாக வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்,'' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.
நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அளித்த உத்தரவு: மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு போதிய முகாந்திரம் இல்லை. முன்ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. அவர் மதுரை கூடுதல் தலைமை ஜெ.எம்.,நீதிமன்றத்தில் ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும். சென்னை சி.பி.ஐ.,அலுவலகத்தில் 4 வாரங்களுக்கு தினமும் காலை 10:30 மணிக்கு ஆஜராக வேண்டும். சாட்சிகளை கலைக்கக்கூடாது. விசாரணையின்போது தலைமறைவாகக்கூடாது. இவ்வாறு உத்தரவிட்டார்.