பட்டா உள்ளிட்ட ஆன்லைன் சான்றிதழ் முறைகேடு ஆய்வுக்கு 14 சிறப்பு அலுவலர்கள் நியமனம்
பட்டா உள்ளிட்ட ஆன்லைன் சான்றிதழ் முறைகேடு ஆய்வுக்கு 14 சிறப்பு அலுவலர்கள் நியமனம்
ADDED : மே 29, 2024 12:36 AM
சென்னை:தமிழக அரசு, 'ஆன்லைன்' வழியே வழங்கும் பட்டா, பட்டா பெயர் மாற்றம் உட்பட, 26 வகையான சான்றிதழ்களை பெறுவதில் சிக்கல்கள் தொடர்வதாக வந்த புகார்களை அடுத்து, சான்றிதழ்கள் முறையாக வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, 14 சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
26 வகை சான்று
தமிழக அரசின் வருவாய் துறை சார்பில், ஜாதி, இருப்பிடம், வருமானம், முதல் பட்டதாரி, வேளாண் வருமானம், வாரிசு, பட்டா, பட்டா பெயர் மாற்றம் உட்பட, 26 வகையான சான்றிதழ்கள் ஆன்லைன் வழியே வழங்கப்படுகின்றன.
பட்டா பெயர் மாற்றம் செய்ய விரும்புவோர், 'இ - சேவை' மையங்கள் வழியாக, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆனால், அலுவலர்கள் அதில் சிறிய தவறுகளை செய்து, விண்ணப்பதாரரை நேரில் வரவழைத்து பணம் பெறும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக ஒருவர் நிலம் வாங்கி, பட்டாவுக்கு விண்ணப்பித்தால், அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் பட்டா வழங்கலாம். ஆனால், நிலம் விற்றவர் பெயரையும், பட்டாவில் சேர்த்து வழங்குகின்றனர்.
ஏன் அவ்வாறு செய்தீர்கள் என, தாலுகா அலுவலகத்தில் கேட்டால், நேரில் வரவழைத்து குறிப்பிட்ட தொகை பெற்றுக் கொண்டு, மறுபடியும் விண்ணப்பியுங்கள் எனக்கூறி, அதன்பின் விண்ணப்பித்தவர் பெயரில் பட்டா வழங்குகின்றனர்.
அதேபோல, கூட்டுப்பட்டாவில் ஒன்றிரண்டு பேர் பெயரை விட்டு விட்டு பட்டா வழங்குகின்றனர். இதுகுறித்து விசாரித்தால், நேரில் வருமாறு கூறி, விடுபட்டவர்கள் பெயரை சேர்க்க குறிப்பிட்ட தொகை பெறுகின்றனர். லஞ்சத்தை தடுக்க, அரசு ஆன்லைன் வழி சான்றிதழ் பெற ஏற்பாடு செய்த பின்னும், இதுபோன்ற பிரச்னைகளை ஏற்படுத்தி, பணம் வசூலிப்பது அதிகமாக உள்ளது.
அரசுக்கு அறிக்கை
இதுகுறித்து, அரசுக்கு புகார்கள் சென்ற நிலையில், ஆன்லைன் வாயிலாக சான்றிதழ் வழங்கும் செயல்பாடு குறித்து, கடந்த 22ம் தேதி, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து, வருவாய்த் துறை ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்களை சிறப்பு அலுவலர்களாக, மாவட்டங்களுக்கு அனுப்பி, ஆன்லைன் சான்றிதழ் செயல்பாடு மற்றும் அதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து, அவர்கள் மாதம்தோறும் அரசுக்கு அறிக்கை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.