கோவை:நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதையடுத்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, கோவையில் பாராட்டு விழா முப்பெரும் விழாவாக நடத்தப்பட்டது. இதில், கூட்டணி கட்சி தலைவர்கள், பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
தி.மு.க., 40க்கு 40 வென்றதால் முதல்வர் ஸ்டாலினுக்கு...
முப்பெரும் விழா நடத்தி கோவையில் கோலாகலம்
கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா, 'இண்டியா' கூட்டணிக்கு ஓட்டளித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா மற்றும் வெற்றிக்கு வழிநடத்திய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என, முப்பெரும் விழா, தி.மு.க., சார்பில் கோவை கொடிசியா மைதானத்தில் நடந்தது.
விழாவில் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்திற்கு எட்டு முறை வந்த பிரதமர் மோடி கட்டமைத்த பிம்பத்தை, ராகுல் ஒரே ஒரு 'ஸ்வீட் பாக்ஸ்' கொடுத்து 'க்ளோஸ்' பண்ணிவிட்டார். அவரது அன்பை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது. அன்று அவர் வழங்கிய இனிப்பு, எதிர்க்கட்சிகளின் கணிப்புகளை பொய்யாக்கியது.
தேர்தலுக்கு முன் 'நாற்பதும் நமதே' என்று நான் முழங்கினேன். அந்த நம்பிக்கைக்கு அடித்தளம், கொள்கைக்காக இங்கு கூடியிருக்கிற நீங்கள் தான். இங்கே மேடையிலுள்ள கூட்டணி கட்சி தலைவர்கள்தான் அந்த நம்பிக்கைக்கு ஆதாரம். இது சாதாரண வெற்றியில்லை; வரலாற்று சிறப்புமிக்க வெற்றி.
இதேபோல, 2004ல் லோக்சபா தேர்தலில் 40க்கு 40 என்ற வெற்றியை கருணாநிதி பெற்றுத் தந்தார். அன்றைக்கு அ.தி.மு.க., ஆட்சி நடந்து கொண்டிருந்தது.
அந்த தோல்வியின் காரணத்தை உணர்ந்து, பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளில் இருந்து ஜெயலலிதா பின் வாங்கினார். அப்போது கருணாநிதியிடம் இதுபற்றி கேட்டபோது, 'இது எங்களின் 41வது வெற்றி' என்று சொன்னார்.
கடந்த 2004 கருத்துக் கணிப்புகளில், வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ., அரசு தான் வெற்றி பெறும் என்று சொன்னார்கள்; ஆனால் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.
இப்போதும் அதேபோல, 400 இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும் என்று சொன்னார்கள்; அதை உடைத்து, பா.ஜ., தனியாக ஆட்சி அமைக்க முடியாத நிலையை நாம் உருவாக்கியுள்ளோம்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றியமைப்போம் என்று சொன்னவர்கள், அம்பேத்கர் உருவாக்கிய சட்ட புத்தகத்தை தலை வணங்க வைத்தது தான், இண்டியா கூட்டணியின் 41வது வெற்றி.
கடந்த 2004ல் நாம் 40க்கு 40 வெற்றி பெற்றபோது, ஆளுங்கட்சியான அ.தி.மு.க., மீதான அதிருப்தியால் கிடைத்த வெற்றி என்று சொன்னார்கள்.
அது அதிருப்தி என்றால், இப்போது 2024ல் கிடைத்துள்ள வெற்றி, நம் திராவிட மாடல் அரசு மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள திருப்தியால் கிடைத்துள்ள வெற்றி.
பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ள 240 தொகுதிகள் என்பது மோடியின் வெற்றியல்ல; தோல்வி. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் தயவில் தான் மோடி பிரதமராக இருக்கிறார்.
நாம் நம்பிய அரசியல் சட்டமும், ஜனநாயகமும் தான் இந்த தேர்தலில் வென்றுள்ளது. மொத்தம், 234 எம்.பி.,க்கள் இந்த அரசுக்கு எதிராக லோக்சபாவில் இருக்கின்றனர்.
பா.ஜ., நினைத்ததெல்லாம் செய்ய முடியாது. இங்கிருந்து 40 பேர் வென்று, அங்கே சென்று என்ன செய்யப் போகின்றனர் என்று சிலர் கேட்கின்றனர்.
கடந்த ஐந்தாண்டுகளில், 9,695 கேள்விகள் கேட்டிருக்கின்றனர். மொத்தம் 1,949 விவாதங்களில் பங்கேற்று 59 தனிநபர் மசோதாக்களை கொண்டு வந்திருக்கின்றனர்.
அவர்களின் செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையில், பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா ஆகியோர், தமிழக எம்.பி.,க்களை எதிர்த்தே அதிகம் பேசியிருக்கின்றனர். இதை விட வேறு எந்த சான்றிதழும் தேவையில்லை.
சமூக நீதிக்காக பார்லிமென்டில் அதிகமாக உரிமைக்குரல் கொடுத்தவர்கள் தமிழக எம்.பி.,க்கள் தான்.
இப்போது 39 லோக்சபா தொகுதிகளில் பெற்றுள்ள வெற்றியின்படி, 221 சட்டசபை தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. விக்கிரவாண்டி தொகுதியிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். இனி தமிழகத்தில் எப்போதுமே திராவிட மாடல் ஆட்சியே தொடரும்.
இவ்வாறு பேசினார்.

