என்னை பாலியல் குற்றவாளி என்பீர்களா: சீமான் ஆவேசம்
என்னை பாலியல் குற்றவாளி என்பீர்களா: சீமான் ஆவேசம்
ADDED : மார் 02, 2025 01:05 PM

சென்னை: 'எது கண்ணியம்? நான் பாலியல் குற்றவாளியா?' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் சிலர், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை, 'பாலியல் குற்றவாளி' என்று விமர்சனம் செய்துள்ளனர். இது குறித்து சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: என்னை பாலியல் குற்றவாளி என்று நீங்கள் எப்படி சொல்லலாம். நீங்கள் நீதிபதியா? விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது எப்படி என்னை பாலியல் குற்றவாளி என்று முடிவு செய்தீர்கள்?
ஒரு பெண் சொல்வதை எப்படி உண்மை என்று நம்புகிறீர்கள். ஆயிரம் பேர் சொல்லலாம். விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது நீங்கள் எப்படி பேசலாம்? அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தி.மு.க.,எம்.பி., கனிமொழி கூறியது என்ன? 9ம் வகுப்பு மாணவியை 4 ஆசிரியர்கள் சேர்ந்து கர்ப்பம் ஆக்கியதற்கு ஏன் வாய் திறக்கவில்லை? என்னை பார்த்து நடுங்குகிறார்கள்.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு உண்ணி மாதிரியாக இருந்தவர்கள், தி.மு.க., சார்ந்து நிற்கிறீர்கள். நீங்க என்ன பேச என்ன தகுதி வைத்து இருக்கிறீர்கள். எது வளர்ச்சி என்று கேட்டால் உங்களால் பதில் சொல்ல முடியுமா? உருவாக்க முடியாத இயற்கை வளங்களை அழிக்க உங்களுக்கு உரிமை கொடுத்தது யார்? இவ்வாறு சீமான் கூறினார்.