செயற்கை கருத்தரித்தல் மையம்: அரசு மருத்துவமனையில் திறப்பு
செயற்கை கருத்தரித்தல் மையம்: அரசு மருத்துவமனையில் திறப்பு
ADDED : ஜூன் 08, 2024 12:33 AM

சென்னை: நாட்டிலேயே முதல் முறையாக, சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில், இலவச செயற்கை கருத்தரிப்பு மையம் - பிரசவ வளாகம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் அரசு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் மகப்பேறு மருத்துவமனை உள்ளது.
திறந்து வைத்தார்
இந்த மருத்துவமனையில், நாட்டிலேயே முதல் முறையாக கட்டணமின்றி சிகிச்சை அளிக்கும் வகையில், 6.97 கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன செயற்கை கருத்தரிப்பு மையம் மற்றும் பிரசவ வளாகத்தை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.
பின், அமைச்சர் சுப்பிர மணியன் பேசியதாவது:
எழும்பூர் அரசு மருத்துவமனையிலும், மதுரை ராஜாஜி மருத்துவமனையிலும் செயற்கை கருத்தரித்தல் மையம் துவங்கப்படும் என, 2022 - 23ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
அதிநவீன மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, இந்த கருத்தரித்தல் மையம் துவங்கப்பட்டு உள்ளது.
மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதற்கு, அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து, வெற்றியும் கண்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், ஒரு லட்சம் கர்ப்பிணியரில், பிரசவத்தில் இறப்பு விகிதம் 70க்கும் மேல் இருந்தது.
படிப்படியாக குறைத்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் 54; கடந்தாண்டு 52; இந்தாண்டு 45 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
கருவுறாமை ஏற்படுவதற்கு டாக்டர்களால் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
குறிப்பாக உடற்பயிற்சிகள் இல்லாமல் இருப்பது, உடல் பருமனாக இருப்பது, உணவு பழக்க வழக்கங்களால் ஏற்படுகிற மாற்றங்கள் போன்றவை தான் காரணங்களாக உள்ளன.
உலக சுகாதார மையம் தரவுகளின்படி, இந்தியாவில் 25 முதல் 45 வயதுக்கு உட்பட்ட 3.9 சதவீத மகளிருக்கு கருத்தரிப்பின்மை பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
இந்த செயற்கை கருத்தரித்தல் மையம் நிச்சயம் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்.
ரூ.10 லட்சம் தேவை
சண்டிகர், டில்லி, மஹாராஷ்டிரா அரசு மருத்துவமனைகளில், செயற்கை கருத்தரிப்பு மையங்கள் இருந்தாலும், அங்கு ஒரு கருத்தரிப்பு சுழற்சிக்கு, 2.5 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.
ஒரு குழந்தை பிறப்புக்கு, 7 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது.
அதேநேரம், நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில், 6.97 கோடி ரூபாய் மதிப்பில் இலவச செயற்கை கருத்தரித்தல் மையம் துவங்கப்பட்டு உள்ளது.
மேலும், அதிநவீன பிரசவ அறை, 89.96 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், இரண்டாவது இலவச செயற்கை கருத்தரித்தல் மையம் விரைவில் துவங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.