'ஆளவந்தார் நிலத்தை காப்பாற்ற அசோக் சிங்காலாக மாறவும் தயார்' : பா.ஜ., மூத்த தலைவர் ராஜா
'ஆளவந்தார் நிலத்தை காப்பாற்ற அசோக் சிங்காலாக மாறவும் தயார்' : பா.ஜ., மூத்த தலைவர் ராஜா
ADDED : ஜூலை 26, 2024 05:47 AM

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் இயங்கும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமாக, 1,054 ஏக்கர் நிலம் கடலோரப் பகுதிகளில் உள்ளது; ஹிந்து சமய அறநிலையத் துறை பராமரித்து நிர்வகிக்கிறது. ஆளவந்தாரின் குருபூஜை விழா, அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்நாளான நேற்று, திருவாய்மொழி, திவ்ய பிரபந்த சேவையுடன் குருபூஜை நடத்தப்பட்டது.
ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல், வன்னியர் இனத்தைச் சேர்ந்த ஆளவந்தாரின் நிலத்தை, அறநிலையத் துறையிடமிருந்து மீட்க வேண்டுமென வலியுறுத்தும் வன்னிய குல ஷத்திரிய சமூக சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியதாவது:
அடுத்த ஆண்டு குருபூஜையில், ஒரு லட்சம் பேரை திரட்டி வந்து பலம் காட்ட வேண்டும். லட்சம் பேர் கூடினால், 1,000 ஏக்கர் நிலத்தை திருப்பி தந்து விடுவர்.
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின், 146 ஏக்கர் நிலத்திற்கு வாடகையாக, 4 லட்சம் ரூபாய் தான் அறக்கட்டளைக்கு அளிக்கின்றனர். மார்க்கெட் மதிப்பிற்கே வாடகை அளிக்க வேண்டும்.
அறநிலையத் துறை விதிகளின்படி, ஹிந்து கோவில் சொத்துக்களை காப்பாற்றாத இணை கமிஷனர்கள், கடமை தவறியவர்கள் என நீதிமன்றமே கூறியுள்ளது. அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
ஹிந்து விரோத தீய அரசு மாநிலத்தில் உள்ளது; மெட்ரோவிற்காக கோவிலை இடிக்க முயற்சிக்கிறது. நாமே ஆளவந்தார் நிலத்திற்கு வேலியிட வேண்டும்.
ஆளவந்தார் நிலத்தின் மீது, தமிழகத்தின் முதல் குடும்பத்தின் தீய பார்வை பதிந்துள்ளது. நாம் எல்லாரும் சேர்ந்து, இந்த இடத்தையும் அயோத்தியாக மாற்ற வேண்டும். அதற்காக, அசோக் சிங்காலாக மாற நானும் தயார்.
இவ்வாறு அவர் பேசினார்.