சட்டசபை மானிய கோரிக்கை விவாதம்: ஆர்வம் காட்டாத எம்.எல்.ஏ.,க்கள்
சட்டசபை மானிய கோரிக்கை விவாதம்: ஆர்வம் காட்டாத எம்.எல்.ஏ.,க்கள்
ADDED : ஜூன் 24, 2024 06:45 AM

சென்னை : சட்டசபையில் மாலை நேரத்தில் நடக்கும் மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்க, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பலரும் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
சட்டசபையில், பிப்., அல்லது மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கலின்போது, துறை ரீதியாக திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியை உறுதி செய்வதற்காக, ஜூலை அல்லது ஆகஸ்டில் மானிய கோரிக்கை விவாதம் மற்றும் ஓட்டெடுப்பு நடக்கிறது.
பதிலுரை
அப்போது, எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிப்பர். பின்னர் பதிலுரை வழங்கி, துறை தொடர்பாக புதிய திட்டங்களையும் அறிவிப்பர். முன்பெல்லாம் காலை 10:00 மணிக்கு சட்டசபை துவங்கி பிற்பகல் 3:00 மணிக்குள் மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படும். ஒவ்வொரு நாளும் இரண்டு, மூன்று துறைகளின் மீது மட்டுமே விவாதம் நடக்கும். ஆனால், 2021 மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும், சட்டசபை நிகழ்வுகளில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.
'சட்டசபை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 100 நாட்கள் நடத்தப்படும்' என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், விக்கிரவாண்டி, சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை காரணம் காட்டி, நடப்பாண்டு மானிய கோரிக்கை தாக்கல் செய்வதற்கு, சட்டசபை ஒன்பது நாட்கள் மட்டுமே நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, 20ம் தேதி முதல் சட்டசபை துவங்கி நடந்து வருகிறது. முதல் நாள், மறைந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு இரங்கல் தெரிவித்து சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின், காலை 9:30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரையும்; மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் சபையை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, இரண்டு நாட்கள் சட்டசபை கூட்டம் முடிந்துள்ளது. காலையில் ஆர்வமுடன் வரும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மாலையில் நடக்கும் விவாதங்களில் பங்கேற்க வருவதில்லை.
இருக்கைகள் காலி
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் சபையை புறக்கணித்து வருகின்றனர். பா.ம.க., - பா.ஜ., - காங்., உள்ளிட்ட கட்சிகளின் சட்டசபை தலைவர்களும், சபை நிகழ்வுகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், எதிர்க்கட்சிகள் வரிசை மட்டுமின்றி, ஆளுங்கட்சி வரிசையிலும் எம்.எல்.ஏ.,க்களின் இருக்கைகள் காலியாகின்றன. சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, அமைச்சர்கள் இறுதியாக பதிலளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதனால், துறைகள் தொடர்பாக எம்.எல்.ஏ.,க்கள் பேசும்போது, அதை எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமின்றி அமைச்சர்களும் கவனிப்பது இல்லை. தங்களுக்குள் பேசி உள்விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பேசும் வீடியோக்கள், சட்டசபை செயலகம் வாயிலாக வெளியிடப்பட்டு, மீடியாக்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த வீடியோக்களில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் குழு விவாதம் நடத்துவதை பார்த்து பலரும் கவலை அடைந்துள்ளனர்.