வக்பு வாரியத்தால் முடங்கிய சொத்துக்கள்; திருச்சி போல திருப்பூருக்கும் தேவை தீர்வு
வக்பு வாரியத்தால் முடங்கிய சொத்துக்கள்; திருச்சி போல திருப்பூருக்கும் தேவை தீர்வு
ADDED : ஆக 12, 2024 12:46 AM

திருப்பூர் : 'திருச்சி மாவட்டத்தில், வக்பு வாரிய நில விவகாரத்துக்கு தீர்வு காணப்பட்டது போல, திருப்பூர் மாவட்டத்திலும் தீர்வு காண கலெக்டர் முன்வர வேண்டும்' என, பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில், சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், மசூதிகளுக்கு சொந்தமான சொத்து மற்றும் நிலம் தொடர்பான பட்டியல் இணைக்கப்பட்டிருந்தது. அதன் மீது எவ்வித பதிவும் மேற்கொள்ள வேண்டாமென பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
மசூதிக்கு சொந்தமான சொத்து விபரம் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஒரு புல எண் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் வரும் பிரிவுகளை குறிப்பிடவில்லை. மசூதி சொத்தின் மீது விதிக்கப்பட்ட தடையால், ஒரே புல எண்ணில் வரும் தனியார் சொத்துக்கள் முடக்கப்பட்டன.
திருப்பூர் தெற்கு தாலுகா, மங்கலம் கிராமம்; அவிநாசி, உடுமலை, தாராபுரம் என, பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், கலெக்டரிடம் முறையிட்டனர்.
'மசூதிக்கு சொந்தமான சொத்துக்கு மட்டும் தடை விதிக்க வேண்டுமே தவிர, ஒட்டுமொத்தமாக கிராமத்துக்கே தடை விதிக்கக்கூடாது; இதை, சரிசெய்து கொள்ள வேண்டும்' என, கலெக்டர், வக்பு வாரியத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
மக்கள் கூறியதாவது: அரசு வழங்கிய பட்டா இருந்தும், பதிவுத்துறை வாயிலாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வழங்கிய பட்டாவை காட்டிலும், வக்பு வாரியம் வழங்கிய தெளிவில்லாத பட்டியல் முக்கியமா? திருச்சி மாவட்டத்தில், ஒட்டுமொத்த கிராமத்தின் மீதான வக்பு வாரிய தடை நீக்கப்பட்டதாக, கலெக்டர் அறிவித்துள்ளார்.
அதேபோல், திருப்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி, முடங்கியுள்ள சொத்துக்கள் மீதான தடையை உடைக்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

