கணவரை கட்டாயமாக மதம் மாற்றும் முயற்சி; தற்கொலை எண்ணத்தில் தவிப்பு என மனைவி புகார்
கணவரை கட்டாயமாக மதம் மாற்றும் முயற்சி; தற்கொலை எண்ணத்தில் தவிப்பு என மனைவி புகார்
ADDED : பிப் 25, 2025 05:56 AM

மதுரை: மதுரையில், தன்னையும், கணவரையும் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றம் செய்ய தொடர்ந்து முயற்சி நடப்பதாகவும், இதனால் கணவர் தற்கொலை எண்ணத்தில் இருப்பதாகவும், பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மதுரை, விராட்டிப்பத்து பென்னர் காலனியைச் சேர்ந்தவர் கமலா, 36. இவரது கணவர் அய்யப்பா. கோச்சடையில் இருவரும் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகின்றனர். ஹிந்து முறைப்படி திருமணம் நடந்தது.
அய்யப்பாவின் தந்தை நாகலிங்கம். இவர், 2018 முதல் தன்னையும், கணவரையும் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற முயற்சித்து வருவதாகவும், இதன் பின்னணியில் சிலர் துாண்டுதல் இருப்பதாகவும் எஸ்.எஸ்.காலனி போலீசில் கமலா புகார் அளித்துள்ளார்.
எல்லை மீறல்
அதில் தெரிவித்துள்ளதாவது:
மதுரை, நடராஜ் நகரில் சர்ச் நடத்தி வரும் கிங்ஸ்டன் பால் என்பவர், மாமனார் நாகலிங்கத்துடன் இணைந்து, எங்களை கிறிஸ்துவ மதத்திற்கு மதமாற்றம் செய்ய துாண்டினார்.
அது நாளுக்குநாள் எல்லை மீறிக்கொண்டே போனது. நாங்கள் வேறு வழியின்றி சகித்துக் கொண்டு வந்தோம்.
கடந்தாண்டு ஆகஸ்டில் மாமனாருடன் டி.பி.எம்., நகரைச் சேர்ந்த பாஸ்டர் சுந்தரமூர்த்தி, அவரது மனைவி மற்றும் லிவிங்ஸ்டன், அவரது மனைவி எங்கள் வீட்டிற்கு வந்தனர்.
எங்களை கிறிஸ்துவ ஆராதனையில் பங்கேற்குமாறும், நாங்கள் சொல்லும் வாசகங்களை சொல்லாவிட்டால், வாழ்வில் மீளமுடியாதபடி சிக்கல், துன்பங்கள் ஏற்படும் எனவும் கட்டாயப்படுத்தி, மன உளைச்சலை ஏற்படுத்தினர்.
பிப்., 20ல் எங்கள் கடை முன்பு மாமனாரும், கிங்ஸ்டன் பாலும் கிறிஸ்துவ மத ஆராதனையும், ஜெபமும் செய்தனர். இதற்கிடையே, என் கணவர் தற்கொலை செய்யும் எண்ணத்தில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்ததை பார்த்தேன்.
சட்ட நடவடிக்கை
அதில், மாமனார், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த சிலரின் பெயர்களை குறிப்பிட்டு, எங்களை மதம் மாறுமாறு தொல்லை செய்வதாகவும், அதனால் நான் தற்கொலை செய்யப் போவதாகவும் எழுதியிருந்தார். இதற்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.