ADDED : ஜூலை 03, 2024 08:31 PM

மயிலாடுதுறை:சீர்காழியில் சில நாட்களுக்கு முன்பு நடந்த கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 7 பேரை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி. மீனா உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கச்சேரி சாலை முக்கூட்டில், கடந்த ஜூன் 27-ம் தேதி மதியம் சீர்காழி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த மதன்குமார்.40., சீர்காழி உப்பனாற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மதன்குமாரின் உறவினர் மணிகண்டன்.32. ஆகிய இருவரையும் மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். பட்டப்பகலில் நகரப்பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சீர்காழி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து முக்கிய குற்றவாளிகளான சீர்காழி அய்யனார்கோயில் தெருவைச் சேர்ந்த அருண்குமார்.33, ஈசானியத் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார்.34. ஆகிய இருவர் உட்பட மொத்தம் 6 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் போலீசாரின் மெத்தனப் போக்கால் இச்சம்பவம் நடந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட எஸ்.பி. மீனா விசாரணை மேற்கொண்டு சீர்காழி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 7 பேரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி சீர்காழி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆயுதப்படைக்கும், சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோக்குமார் குத்தாலம் போலீஸ் ஸ்டேஷனுக்கும், சீனிவாசன் மாவட்ட குற்றப்பிரிவுக்கும், எஸ்.எஸ்.ஐக்கள் சதீஷ்குமார், ராஜாஜி, ஏட்டு குலோத்துங்கன், காவலர் அகஸ்டின் ஆகியோர் மணல்மேடு போலீஸ் ஸ்டேஷனுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.