10 ஆண்டுகளில் தமிழக அரசியலே மாறும்; ஆடிட்டர் குருமூர்த்தி நம்பிக்கை
10 ஆண்டுகளில் தமிழக அரசியலே மாறும்; ஆடிட்டர் குருமூர்த்தி நம்பிக்கை
ADDED : மார் 10, 2025 05:07 AM

சென்னை: ''அடுத்த பத்தாண்டுகளில், தமிழக அரசியலே மாறும்,'' என, ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்தார்.
'கலைமகள்' மாத இதழின், 94வது ஆண்டு விழா மற்றும் கலைமகள் விருது வழங்கும் விழா, சென்னை, சி.பி.ஆர்.கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடந்தது.
சமூக மாற்றம்
'ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்' இதழின் ஆசிரியர் சுவாமி அபவர்கானந்தர், அல்லயன்ஸ் பதிப்பக உரிமையாளர் ஸ்ரீனிவாசன், வானதி பதிப்பக உரிமையாளர் ராமநாதன், லண்டன் ஆசிரியர் சிவா பிள்ளை ஆகியோருக்கு கலைமகள் விருதுகளை, 'துக்ளக்' இதழ் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி வழங்கி பேசியதாவது:
தமிழகத்தில், 1967க்கு பின், அரசியல் சாக்கடையாக மாறி விட்டது. அந்த காலகட்டத்தில், கோவிலுக்கு செல்ல முடியாது.
குங்குமம் வைத்து சென்றால், காரித் துப்பினர். மாநிலம் முழுதும் தேச விரோத செயல்கள் தலைவிரித்தாடின. தர்மம், நாட்டுப்பற்று, ஆன்மிகம் போன்றவற்றை விட்டால் தான், அரசியல் என்ற நிலையை உருவாக்கி விட்டனர்.
அதை மாற்ற நாங்கள் தொடர்ந்து பாடுபட்டோம். எம்.ஜி.ஆர்., வெளிப்படையாக மூகாம்பிகை கோவிலுக்கு சென்றார். நாங்கள் நினைத்த சமூக மாற்றம் எப்போதோ வந்து விட்டது.
ஆனால், திராவிட கட்சிகளின் அரசியலிடம் இருந்து தான் மாற்றம் வரவில்லை. எல்லாவற்றையும் மாற்ற ஒரு புள்ளி தோன்ற வேண்டும். தற்போது, அது தோன்றி உள்ளது.
நுாற்றாண்டு விழா
எதையெல்லாம் சொல்லி, திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றியதோ, அவையே அவற்றை அழிக்கும் சக்தியாக மாறும். இன்னும் பத்தாண்டுகளில், திராவிட கட்சிகளுக்கு மதிப்பு இருக்காது. தமிழக அரசியலே மாறும். நாட்டில் தர்மம் சிதையும் போது, அதற்காக மவுனமாக இருப்பவரே அதர்மவாதி என்பர்.
அதுபோல இல்லாமல், 'கலைமகள்' உள்ளிட்ட பத்திரிகைகள், அதர்மத்துக்கு எதிராக, தர்மத்தை நிலைநாட்ட ஒன்றிணைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சத்யஞானானந்தர் தன் ஆசியுரையில், ''ராமகிருஷ்ண மடத்தில் உள்ள கோவிலின், 25ம் ஆண்டு விழா, மருத்துவமனை நுாற்றாண்டு விழா உள்ளிட்டவை, இம்மாதம் நடக்க உள்ளன.
''இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வழிகாட்டும் ஆன்மிக, உத்வேக கருத்துக்கள் அடங்கிய ஏராளமான புத்தகங்களை வெளியிடுகிறோம்.
''அவற்றை படித்து, அனைவரும் நாட்டுப்பற்றுடன் வளர, ராமகிருஷ்ணர், சாரதா தேவி, விவேகானந்தர் ஆகியோர் அருள்புரியட்டும்,'' என்றார்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில், வித்யா பாரதி பாலசுப்பிரமணியம் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது. 'கலைமகள்' ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் வரவேற்றார். நாடக இயக்குனர் சி.வி.சந்திரமோகன் நிகழ்ச்சியை தொகுத்தார். கலைமகள் பதிப்பாளர் பி.டி.டி.ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.