சைபர் அடிமைகளாக 1000 தமிழர்கள் வெளிநாடுகளில் சிக்கி இருப்பதாக பகீர்
சைபர் அடிமைகளாக 1000 தமிழர்கள் வெளிநாடுகளில் சிக்கி இருப்பதாக பகீர்
ADDED : நவ 03, 2024 03:19 AM

கோவை:தென்கிழக்கு ஆசிய நாடுகள் உட்பட பல்வேறு வெளிநாடுகளில், கால் சென்டர் வேலை என அழைத்துச்சென்று, இளைஞர்களை 'சைபர் குற்றங்களில்' ஈடுபடுத்துவதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இவ்வாறு சைபர் அடிமைகளாக இருப்பதாகவும் போலீசார் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவில் கல்லுாரி படிப்பு முடித்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. டிரைவர் வேலை, கடைகள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் மேற்பார்வையாளர்கள் வேலை என அழைத்துச்சென்று, அங்கு அடிமைகள் போல் வேலை வாங்குவது குறித்து பல செய்திகள் வெளியாகியுள்ளன. அதுபோல் சிக்கியவர்கள் அரசு முயற்சியில் மீட்டு வரப்பட்டுள்ளனர்.
தற்போது, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப குற்றச்செயல்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. தற்போது, ஒரு சில போலி ஏஜன்சியை சேர்ந்தவர்கள் கல்லுாரி படிப்பை முடித்து வெளிவரும் மாணவர்கள், வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் உள்ளிட்டவர்களை குறிவைத்து வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்கின்றனர்.
அவ்வாறு அவர்களை அணுகும் இளைஞர்களிடம் கால் சென்டர், டேட்டா என்ட்ரி வேலை எனக்கூறி 'டூரிஸ்ட் விசாவில்' கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், வேறு சில நாடுகளுக்கும் அழைத்துச் செல்கின்றனர்.
அங்கு சென்றவுடன், பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டு, அவர்களை கட்டாயப்படுத்தி, ஆன்லைன் முதலீடு உள்ளிட்ட பல்வேறு சைபர் குற்றச்செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்.
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, டில்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 40,000 பேர் இப்படி சிக்கியுள்ளதாகவும், இதில், தமிழகத்தில் இருந்து மட்டும் 1000க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர், 'சைபர் ஸ்லேவரி' எனப்படும் சைபர் குற்றங்களை செய்ய அடிமைகளாக வைக்கப்பட்டுள்ளனர். தமிழக போலீஸ் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் இயக்குனர் சந்தீப் மிட்டல், சைபர் அடிமைகள் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகர போலீசார் சார்பில் கல்லுாரிகளில் 'சைபர் ஸ்லேவரி' எனப்படும் சைபர் அடிமைகள் மற்றும் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. வெளிநாடுகளில் வேலை என ஏஜன்சிகளை மக்கள் அணுகும் முன், அந்த ஏஜன்சியின் செயல்பாடுகள் குறித்து இந்திய வெளியுறவுத்துறையின் emigrate.gov.in என்ற தளத்தில் தெரிந்து கொள்ள வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.