சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கொலை: நட்டா, ராகுல் கண்டனம்
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கொலை: நட்டா, ராகுல் கண்டனம்
UPDATED : ஜூலை 06, 2024 06:21 PM
ADDED : ஜூலை 06, 2024 10:39 AM

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளார்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொலையான ஆம்ஸ்ட்ராங் உறவினரை சந்தித்து ஆறுதல் கூற பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி சென்னை வரவுள்ளார்.
காங்., எம்பி.,யும், லோக்சபா எதிர்கட்சி தலைவருமான ராகுல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடும் அதிர்ச்சி அளிப்பதாகவும், தமிழகஅரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று இரவு வீட்டருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) ஆறு பேர் கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது உடல் ராஜிவ் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவமனை முன்பு, ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஆதரவாளர்களை போலீசார் தடுத்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுவான இடம் கோரி ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதம் நடத்தினர்.
போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து விட்டு, ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியலுக்கு முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்
இது குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தி.மு.க., அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரால் கூட, பாதுகாப்பாக வாழ முடியவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.
காவல்துறையையும், உள்துறையையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கட்டுப்படுத்துவதில், தோல்வியடைந்து விட்டார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு, கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதிக்கு சென்று, கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய ராகுல், ஏன் கள்ளக்குறிச்சிக்கு வரவில்லை. தி.மு.க., அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானது. இவ்வாறு அவர் கூறினார்.
கமல்
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், ‛‛பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவரது மறைவு பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பாகும்.
ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்'' எனக் கூறியுள்ளார்.
நட்டா கண்டனம்
பா.ஜ., தலைவர் நட்டா வெளியிட்ட இரங்கல் செய்தியில், ஆம்ஸ்ட்ராங் கொடூர கொலையால், நாட்டு மக்கள் கோபத்தில் உள்ளனர். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகாரம் அளிப்பதற்காக பாடுபட்ட வளர்ந்து வரும் தலைவரின் வாழ்க்கை கொடூரமாக குறைக்கப்பட்டது. அவரின் குடும்பத்தினரின் நினைவாக எனது எண்ணங்கள் உள்ளது. குற்றவாளிகளை தமிழக அரசு விரைவில் தண்டிக்க வேண்டும். ஏழை மற்றும் சமூகத்தின் விளிம்பு நிலை பிரிவு மக்களை தி.மு.க., காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கிறது என்ற கூற்றை, இந்த கொலை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தான் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். திமுக காங்கிரஸ் கூட்டணி வெட்டி அரசியலில் ஈடுபடாமல், அவர்கள் மீது கருணை காட்டினால் நல்லது எனக்கூறியுள்ளார்.