ADDED : மார் 22, 2024 01:08 AM
சென்னை:தபால் ஓட்டு போடுவோர், தங்கள் ஓட்டுகளை தபாலில் அனுப்ப இயலாது. குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட மையங்களில் வைக்கப்படும், ஓட்டுப் பெட்டிகளில் நேரடியாக மட்டுமே செலுத்த முடியும்.
தேர்தல் பணியில் ஈடுபடுவோர், தபால் ஓட்டு அளிக்க, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உள்ளது. இதுவரை நடந்த தேர்தலில், தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கான பயிற்சி வகுப்பின் போது, தபால் ஓட்டு வழங்கப்படும். பயிற்சி நிறைவு நாளின் போது, பயிற்சி மையங்களில் ஓட்டுப் பெட்டிகள் வைக்கப்படும்.
அதில், சம்பந்தப்பட்டவர்கள் தபால் ஓட்டுகளை செலுத்துவர்.
இதுதவிர, தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் முன், ஓட்டு பெட்டி ஒன்று வைக்கப்படும். அதிலும், தபால் ஓட்டை செலுத்தலாம். ஓட்டுப்பதிவு அன்று அதிகாலை வரை ஓட்டு போட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இது தவிர, தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தபாலிலும் தபால் ஓட்டு அனுப்பலாம்.
இம்முறை, அந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தபால் ஓட்டை தபாலில் அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
தபால் ஓட்டு அளிப்போர், மாவட்ட கலெக்டர்கள் தெரிவிக்கும் மையங்களில், ஓட்டுப்பதிவுக்கு முன்னதாக நேரடியாக ஓட்டளிக்க வேண்டும். மூன்று நாட்கள் ஓட்டுப் பெட்டி வைக்கப்படும். அந்த தேதியை மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பர்.
தேர்தல் பணியில் ஈடுபடுவோர் தவிர்த்து, கடல் வணிகம் செய்வோர், பி.எஸ்.என்.எல்., - சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள், மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சக ஊழியர்கள், இந்திய உணவு கழக தென் மண்டல அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோரும், தபால் ஓட்டளிக்க தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது.
பத்திரிகையாளர் தபால் ஓட்டு
அரசு அங்கீகார அட்டை, மாவட்ட கலெக்டரால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, பஸ் பயண அட்டை வழங்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பத்திரிகையாளர்கள், ஓட்டுப்பதிவு அன்று ஓட்டுச்சாவடிக்கு செல்ல முடியாத நிலையில் இருந்தால், தபால் ஓட்டு அளிக்கலாம்.
அதை விரும்புவோர், படிவம் '12 டி'யை, செய்தி மக்கள் தொடர்பு துறையினரால் பணியமர்த்தப்பட்ட, ஒருங்கிணைப்பு அதிகாரிகளில் ஒருவரிடம் பெற்று, அவர்களின் சான்றிதழை பெற்று, சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு, வரும் 25ம் தேதிக்குள் தகவல் அளிப்பு கடிதத்தை அனுப்பி வைக்க வேண்டும்.
ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக, செய்தி மக்கள் தொடர்பு துறை இணை இயக்குனர், சென்னை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர், தலைமை செயலகம் மக்கள் தொடர்பு அலுவலர், சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

