ADDED : மே 30, 2024 01:32 AM
சென்னை:இம்மாதம் துவங்கியது முதலே, பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்தது. சூறை காற்றுடன் பெய்த மழையால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், கரும்பு, எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் பாதித்துள்ளன.
திருவண்ணாமலை, ஈரோடு, கோவை, ராணிப்பேட்டை, தர்மபுரி உள்ளிட்ட, 25 மாவட்டங்களில், வாழை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. பயிர் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பை, வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட அறிக்கை, அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் சமர்பிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை, வருவாய் துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. வாழை பயிர்களுக்கு ஏக்கருக்கு, 7,500 ரூபாய் வரை மட்டுமே நிவாரணம் வழங்குவது வழக்கம். இதை, 40,000 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என, விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.