'தி.மு.க. வாக்குறுதியை நம்புவது பாழும் கிணற்றில் வீழ்வதற்கு சமம்'
'தி.மு.க. வாக்குறுதியை நம்புவது பாழும் கிணற்றில் வீழ்வதற்கு சமம்'
UPDATED : ஏப் 01, 2024 10:13 AM
ADDED : ஏப் 01, 2024 02:09 AM

சென்னை: 'மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு மட்டும் அரசாணை வெளியிட்டு, 68 சீர்மரபினர் சமுதாய மக்களுக்கு எந்த அரசாணையும் பிறப்பிக்காமல், வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாகக் கூறுவது, தி.மு.க.,வுக்கு எதிரான மன நிலையை உருவாக்கி உள்ளது. இது, வரும் தேர்தலில் எதிரொலிக்கும்' என, தமிழ்நாடு சீர்மரபினர் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதல்வர் ஸ்டாலின், கடந்த 27ம் தேதி தேர்தல் பிரசாரத்தின் போது, சீர்மரபினருக்கு வழங்கப்படும் இரட்டை சான்று முறையை ஒழித்து, ஒரே சான்று வழங்க உத்தரவிட்ட பிறகு தான், உங்கள் முன் துணிச்சலோடு வந்துள்ளேன் என்றார். ஆனால், இன்னும் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்ற செய்தி, மார்ச் 29ல், நம் நாளிதழில் வந்தது.
உடனே துறை செயலரால், 2019 அரசாணையை திருத்தாமல் அந்த ஆணைப்படி, டி.என்.சி., - டி.என்.டி., என, இரண்டு சான்றுகள் வழங்குவதற்கு பதிலாக, டி.என்.சி., - டி.என்.டி., என ஒரே சான்றாக வழங்க உத்தரவிட்டுள்ளதாக, ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வெளியானது.
இது, உண்மையான உத்தரவாக இருந்தால், அது, 68 சமூகங்களை நம்பவைத்து ஏமாற்றிய, பெரும் நவீன அரசியல் மோசடி.
ஏனெனில், இக்கடிதம் இரண்டு தாளில் தனித்தனியாக டி.என்.டி., மற்றும் டி.என்.சி., வழங்குவதற்கு பதிலாக, இரண்டு சான்றையும் ஒரே தாளில் வழங்கும்படி கூறியுள்ளது. இது, தெளிவுரை அல்ல; குழப்ப உரை. முதல்வரின் வாக்குறுதிக்கு எதிரானது.
அ.தி.மு.க., ஆட்சியில், 2019 மார்ச் 8ல் வெளியிடப்பட்ட அரசாணையில் பத்தி நான்கில், கடைசி நான்கு வரிகளை நீக்கிவிட்டு, புதிதாக இனி இம்மக்களுக்கு சீர்மரபினர் பழங்குடி என, சான்று வழங்கப்படும்.
தொடர்ந்து, டி.என்.டி., மற்றும் டி.என்.சி., பெயர்களில் வழங்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் உரிமைகளை பெற்றுக் கொள்ளலாம் என, இடம் பெறச் செய்ய வேண்டும். மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு மட்டும், கடந்த மாதம் 9ம் தேதி அரசாணை பிறப்பித்து விட்டு, 68 சமூக மக்களுக்கு, எந்த அரசாணையும் பிறப்பிக்காமல், வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாகக் கூறுவது, தி.மு.க.,வுக்கு எதிரான மனநிலையை உருவாக்கி உள்ளது.
இது, வரும் தேர்தலில் எதிரொலிக்கும். தி.மு.க.,வின் வாக்குறுதியை நம்புவது பாழும் கிணற்றில் வீழ்வதற்கு சமம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

