ஆண்டு முழுதும் ஸ்ட்ராபெர்ரி, தக்காளி புதிய திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு
ஆண்டு முழுதும் ஸ்ட்ராபெர்ரி, தக்காளி புதிய திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு
ADDED : ஆக 19, 2024 04:04 AM

சென்னை: ஆண்டு முழுதும் ஸ்ட்ராபெர்ரி, தக்காளி உள்ளிட்டவற்றை அறுவடை செய்யும் புதிய திட்டத்திற்கு, பயனாளிகள் தேர்வு நடந்து வருகிறது.
காய்கறிகள், பழங்கள், பூக்கள், வாசனை பொருட்கள், மூலிகைகள் உள்ளிட்டவற்றின் உற்பத்தியை அதிகரிக்க, தோட்டக்கலை துறை வாயிலாக பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அத்துடன், மத்திய, மாநில அரசுகள் நிதியில், விவசாயிகளுக்கு மானியமும் வழங்கப்படுகிறது.
தக்காளி உள்ளிட்ட சில வகை தோட்டக்கலை பொருட்களுக்கு, ஆண்டு முழுதும் தேவை உள்ளது. உற்பத்தி குறையும் போது, அவற்றின் விலை தாறுமாறாக உயர்கிறது.
இதுபோன்ற பொருட்களை ஆண்டு முழுதும் அறுவடை செய்தால், நுகர் வோருக்கு குறைந்த விலையில் கிடைப்பதுடன், விவசாயிகளுக்கும் சீரான வருவாய் கிடைக்கும்.
எனவே, பசுமை குடில்கள், நிழல்வலை குடில்களில் பாதுகாக்கப்பட்ட சூழலில், குடை மிளகாய், வெள்ளரி, தக்காளி, முட்டைகோஸ் போன்ற காய் கறிகள், கார்னேசன், ஜெர் பரா, ரோஜா மற்றும் ஆர்க்கிட் மலர் வகைகள், ஸ்ட்ராபெர்ரி பழம் போன்றவற்றை பயிரிடுவதற்கான திட்டத்தை, தோட்டக்கலை துறை செயல்படுத்த உள்ளது.
உயர் தொழிற்நுட்ப முறைகளை பயன்படுத்தி, இவற்றை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு மானியம் வழங்க, 10.19 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.
இதுகுறித்து, தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இத்திட்டத்தின் கீழ், ஸ்ட்ராபெர்ரி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, பசுமை குடில் அமைக்க அதிகபட்சமாக, 2.5 ஏக்கர் வரை மானியமாக, 1.12 லட்சம் ரூபாய் வழங்கப்படும். நிழல்வலை குடில் அமைக்க, 1.30 லட்சம் ரூபாய் தரப்படும்.
ஜெர்பரா, கார்னேசன், ஆர்க்கிட் மலர்கள் வளர்ப்பதற்கு, பசுமை குடில் அமைக்க சதுர மீட்டருக்கு 305 ரூபாய் வீதம், 4,000 சதுர மீட்டருக்கு மானியம் வழங்கப்படும்.
ரோஜா வளர்ப்புக்கு சதுர மீட்டருக்கு 213 ரூபாய் வீதம், 4,000 சதுர மீட்டருக்கு மானியம் வழங்கப்படும். குடைமிளகாய், வெள்ளரி, தக்காளி சாகுபடிக்கு சதுர மீட்டருக்கு, 70 ரூபாய் வீதம், 4,000 சதுர மீட்டருக்கு மானியம் வழங்கப்படும். இதற்கான பயனாளிகள் தேர்வு நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.