வளர்ச்சியின் பலன்கள் அனைவரையும் சேரவில்லை: வி.ஐ.டி., வேந்தர் கவலை
வளர்ச்சியின் பலன்கள் அனைவரையும் சேரவில்லை: வி.ஐ.டி., வேந்தர் கவலை
ADDED : ஆக 28, 2024 04:14 AM

சென்னை : ''உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்த போதிலும், அதன் பலன்கள் அனைவரையும் சென்று சேரவில்லை,'' என, வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன் கூறினார்.
தமிழக முன்னாள் அமைச்சரும், முதுபெரும் அரசியல் தலைவருமான எச்.வி.ஹண்டே எழுதியுள்ள, இரு நுால்கள் வெளியீட்டு விழா, 'தமிழ்மொழி அகாடமி' சார்பில், சென்னையில் நேற்று நடந்தது.
'நமது அரசியல் சாசனம் - -எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி ஏற்படுத்திய மாற்றங்கள்' என்ற ஆங்கில நுாலை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரகாஷ் பெற்றுக் கொண்டார்.
கடைசி வரை
'சட்டமேதை அண்ணல் அம்பேத்கர்' என்ற நுாலை, வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன் வெளியிட, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜெயச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் வி.ஐ.டி., வேந்தர் விஸ்வநாதன் பேசியதாவது:
அம்பேத்கர் பற்றியும், அவரால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் சாசனம் குறித்தும் மூத்த அரசியல் தலைவரான ஹண்டே, இரு புத்தகங்களை எழுதியுள்ளார். 1949 நவம்பர் 25-ம் தேதி அரசியல் நிர்ணய சபையில், அம்பேத்கர் ஆற்றிய கடைசி உரையில், ஜாதி, மதப் பிரச்னைகள் ஏற்கனவே உள்ளன. இனி அதிகமான கட்சிகள் உருவாகும் என்றும், என்னென்ன பிரச்னைகளை நாடு எதிர்கொள்ளப் போகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே அதிக அரசியல் கட்சிகள் உள்ள நாடு இந்தியா தான். 100 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர்களால் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. இப்போது, மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இது நல்லதா, கெட்டதா என்பது தெரியவில்லை.
இப்படியெல்லாம் நடக்கும் என்பதை எதிர்பார்த்தே அம்பேத்கர், 'அரசியல் சாசனத்தை முன்வைத்து, ஜாதி, மதங்களை பின்னால் வைக்க வேண்டும்' என்றார். இதை இன்றைய அரசியல் கட்சிகளுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மகிழ்ச்சி
உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக, இந்தியா வளர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அந்த வளர்ச்சியின் பலன்கள் அனைத்து மக்களையும் சென்று சேரவில்லை. தனிநபர் வருமானத்தில் மிகவும் பின்தங்கிய இடத்தில் இந்தியா உள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தில், சோஷலிச நாடு என உள்ளது. ஆனால், முதலாளித்துவத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். 1 சதவீதம் பேரிடம் 54 சதவீத சொத்துக்கள் உள்ளன. இது ஆபத்தானது. இந்த ஏற்றத்தாழ்வுகளை மத்திய, மாநில அரசுகள் சரிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
கடந்த 1975ல் தேர்தல் முறைகேடு வழக்கில், எம்.பி., பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டதால், எமர்ஜென்சி என்ற அவசர நிலையை அன்றைய பிரதமர் இந்திரா அமல்படுத்தினார். அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தை முடக்கி விட்டு, எதிர்க்கட்சி எம்.பி.,க்களை சிறையில் அடைத்து விட்டு, அரசியலமைப்பில் பல திருத்தங்களை செய்தார்.
சோஷலிசம், மதச்சார்பின்மை ஆகிய வார்த்தைகள், அப்போதுதான் சேர்க்கப்பட்டன. எமர்ஜென்சி காலத்தில் இந்திராவால் அரசியலமைப்பு சட்டம் எப்படியெல்லாம் சிதைக்கப்பட்டது என்பதை, ஹண்டே யாராலும் மறுக்க முடியாத ஆதாரங்களுடன் எழுதியுள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பா.ஜ., நிர்வாகி ஆசிர்வாதம் ஆச்சாரி, பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, ஹண்டேவின் மகன் டாக்டர் கிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.