ADDED : ஜூலை 02, 2024 05:17 AM

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரம் புதுாரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் பீஹார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி கான்கிரேஸ் புயான் 43, குத்திக் கொலை செய்யப்பட்டார்.
சிவகாசி அருகே நாரணாபுரம் புதுாரில் அனுப்பன்குளத்தைச் சேர்ந்த கார்த்திகேயனின் சிமெண்ட் செங்கல் தயாரிக்கும் கம்பெனியில் பீஹார் மாநில தொழிலாளர்கள் பலர் பணியாற்றுகின்றனர். இங்கு கயா மாவட்டம் ராணிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த கான்கிரேஸ் புயானும் பணியாற்றினார்.
நேற்று முன்தினம் கான்கிரேஸ் புயான் தனது நண்பர்களுடன் இரவு அதே பகுதியில் மது அருந்த சென்றார். பின்னர் அனைவரும் கம்பெனிக்கு திரும்பிய நிலையில் கான்கிரேஸ் புயான் மட்டும் வரவில்லை. நேற்று காலை 6:00 மணிக்கு அதே பகுதியில் உள்ள காலி இடத்தில் குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார்.
போலீசார் கூறுகையில், சம்பவ இடத்தில் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவினை ஆய்வு செய்தபோது , வனப்பாண்டி உள்ளிட்ட சிலர் கான்கிரேஸ் புயானிடம் தகராறு செய்தது தெரிய வந்தது. அவர்களிடம் விசாரித்து வருகிறோம், என்றனர்.