ADDED : மார் 01, 2025 01:53 AM
சென்னை: நடப்பு ஆண்டுக்கான, ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு, வரும், 8ம் தேதி துவங்க உள்ளது.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் ஆண்டுதோறும், ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடக்கும். நடப்பு ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பு, இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், அந்தந்த கோட்டங்களில், பறவைகள் சரணாலயங்களில் திரட்டப்பட்ட விபரங்களை தொகுக்கும் பணிகளில், வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால், பறவைகள் இருப்பு குறித்த உண்மை நிலவரம் தெரிய வராது என்று கூறப்பட்டது.
இந்நிலையில், வரும், 8, 9ம் தேதிகளில், நீர் பறவைகள் குறித்த ஒருங்கிணைந்த கணக்கெடுப்பும், 15, 16ம் தேதிகளில், திறந்தவெளி பகுதிகளுக்கான பறவைகள் கணக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது.
இதில், பங்கேற்க விரும்புவோர், அந்தந்த பகுதிகளில் உள்ள பறவைகள் சரணாலயங்கள், வனத்துறை கோட்ட அலுவலகங்கள், வன உயிரின சரணாலயங்கள் மற்றும் புலிகள் காப்பக அதிகாரிகளை அணுகலாம்.
இவ்வாறு கூறினர்.