சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வில் இளைஞர்களுக்கு முன்னுரிமை
சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வில் இளைஞர்களுக்கு முன்னுரிமை
ADDED : மே 03, 2024 07:06 AM

மதுரை : தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிந்த கையோடு சட்டசபை தேர்தலை சந்திப்பது குறித்து பா.ஜ.,வில் பேச்சு துவங்கியுள்ளது. இதில் அதிக இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வில் இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் வாய்ப்பு தரப்படும் என எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக முக்கிய பதவியில் உள்ளோர், சீனியர்கள், பிரபலங்கள், கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களையே முழுக்க முழுக்க களமிறக்கினர். மாநில தலைவர் அண்ணாமலையே தான் வேட்பாளராக்கப்படுவோம் என எதிர்பார்க்கவில்லை.
லோக்சபா விவாதங்களில் பங்கேற்கும் அளவு படித்த, அனுபவமுள்ளவர்கள் தேவை என்பதாலும், இதில் குறைவான சீட்களே உள்ளது என்பதாலும், முக்கிய பிரமுகர்களை நிறுத்துவதன் மூலம் ஒரு சில இடங்களையாவது கைப்பற்றுவது, மற்ற இடங்களில் கட்சி வலிமையாக உள்ளது எனக்காட்டுவது, அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளியது என்று பெயரெடுப்பது என்ற திட்டங்களுடன் செயல்பட்டனர். இதற்காக திராவிட கட்சிகளைப் போல நிர்வாகிகளுக்கு பணம் தண்ணீராக செலவிடப்பட்டது. ஆனால் மற்ற கட்சிகளைப் போல போதிய வலுவான கட்டமைப்புடன் இல்லாததால் அடிமட்ட நிர்வாகிகளுக்கே முறையாக பணம் போய்ச்சேர வில்லை. ஆங்காங்கே உள்குத்து மோதலாக வெடித்துள்ளது.
இளைஞர்களுக்கு வாய்ப்பு
இதனால் அடுத்த சட்டசபை தேர்தலில் கட்சியை வலிமைப்படுத்த புதிய யுக்தியுடன் களமிறங்க வேண்டும் என மாநில தலைமைக்கு நிர்வாகிகள் யோசனை தெரிவித்துள்ளனர். சமீபத்தில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் சில தகவல்களை நிர்வாகிகளுடன் பகிர்ந்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் அதிக சீட்களில் போட்டியிட முடியும் என்பதால் ஏராளமான இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். இதற்காக இப்போதே களமிறங்க வேண்டும். தேர்தல் துவங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பே வேட்பாளரை அடையாளம் கண்டு தெரிவிப்பர். அவர்கள் தங்களுக்கான தொகுதியில் தீவிர பணியாற்ற வேண்டும்.
பத்தாண்டு அனுபவம் உள்ள, தொகுதியில் குறிப்பிடத்தக்க சேவை செய்து செல்வாக்கு பெற்றவர்களுக்கே அதிக வாய்ப்பு தரப்படும். சட்டசபையில் சீட் கிடைக்காவிடினும் அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் அவர்களுக்கான வாய்ப்பு கிடைக்கும். எனவே வெற்றி பெறுவதை இலக்காக வைத்தே வரும் நாட்களில் செயல்பட வேண்டும் என அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.