தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் சிறப்பு கவனம் செலுத்தும் பா.ஜ.,
தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் சிறப்பு கவனம் செலுத்தும் பா.ஜ.,
ADDED : மே 09, 2024 01:35 AM

சென்னை:லோக்சபா தேர்தலில் தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு, பா.ஜ., சிறப்பு கவனம் கொடுத்து வருகிறது.
ஏழு கட்டங்களாக நடக்கும் லோக்சபா தேர்தலில், முதல் மூன்று கட்டங்களில், 285 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
258 தொகுதிகள்
தமிழகம், கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், கேரளா, உத்தரகண்ட், அருணாச்சல பிரதேசம், கோவா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி, அந்தமான் மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களிலும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
அடுத்த நான்கு கட்டங்களில், 258 தொகுதிகளில் தேர்தல் நடக்கவுள்ளது. கூட்டணி குழப்பங்களால் மஹாராஷ்டிராவிலும், 'இண்டியா' கூட்டணி வலுவாக இருப்பதால் பீஹாரிலும், 2019ல் பெற்றதை விட, பா.ஜ.,வுக்கு வெற்றி குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதை ஈடுகட்ட தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்களில், பா.ஜ., சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 2019ல் மேற்கு வங்கத்தில், 42ல் 18; ஒடிசாவில் 21ல் 8; தெலுங்கானாவில் 17ல் 4 இடங்களில் பா.ஜ., வென்றது.
இந்த மூன்று மாநிலங்களும், இப்போது தங்களுக்கு சாதமாக இருக்கும் என, பா.ஜ., தலைமை கருதுகிறது. அதனால், இந்த மாநிலங்களில் சிறப்பு கவனம் கொடுத்து, பா.ஜ., தேர்தல் பணியாற்றி வருகிறது.
பிரதமர் மோடியும், மேற்கு வங்கம், தெலுங்கானா, ஒடிசாவில் அதிக தொகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார்.
வீடு வீடாக
வெளிமாநிலங்களில் இருந்து அதிகமான பா.ஜ., நிர்வாகிகள், இந்த மூன்று மாநிலங்களிலும் களமிறக்கப்பட்டு உள்ளனர். ஆர்.எஸ்.எஸ்., - வி.எச்.பி., உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளும், இங்கு கூடுதல் கவனம் செலுத்தி, வீடு வீடாகப் பிரசாரம் செய்து வருகின்றன.
கடந்த 2014, 2019 லோக்சபா தேர்தல்களில், உத்தர பிரதேச மாநில பா.ஜ., அமைப்பு பொதுச்செயலராக இருந்து தேர்தல் பணியாற்றிய சுனில் பன்சால், மேற்கு வங்கம், தெலுங்கானா, ஒடிசா மாநில தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து வருவதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக, பா.ஜ., நிர்வாகிகள் கூறுகையில், 'மேற்கு வங்கம், ஒடிசா, தெலுங்கானாவில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில், கடந்த முறை 30ல் வென்றோம்.
'இந்த முறை குறைந்தது, 50 இடங்களில் வெல்வோம். அதற்காக திட்டமிட்டு தீவிரமாக களப் பணியாற்றி வருகிறோம்' என்றனர்.