ADDED : மார் 11, 2025 06:08 AM

சென்னை : “தொகுதி மறுவரையறை பிரச்னையில், மத்திய பா.ஜ., அரசு, தி.மு.க.,வை குற்றஞ்சாட்டுவது வேடிக்கையாக உள்ளது,” என, வி.சி., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
மாநிலங்களுக்கான வரி வருவாய் பகிர்வை குறைக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்போம்.
லோக்சபா தொகுதி, மறுவரையறை தொடர்பாக முதல்வர் எடுத்துள்ள முயற்சி, தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. தென் மாநில முதல்வர்களை ஒருங்கிணைத்து, குழு அமைக்கும் முயற்சி நடந்து வருகிறது. தொகுதி மறுவரையறை நடக்கும்போது, தலித்துகள், முஸ்லிம்களின் ஓட்டை சிதறடிக்காமல், அதற்கான மதிப்பை வழங்க வேண்டும்.
இந்த மறுவரையறை, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு தான் நடக்க உள்ளது. இதில், தென் மாநிலங்கள் எப்படி பாதிக்கப்படும் என, அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பா.ஜ.,வினர் கூறுவதுபோல், மறுவரையறை தொடர்பான பிரச்னைகள் எதுவும் கற்பனையான ஒன்று அல்ல; முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பிரச்னை. குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை நடைமுறைப்படுத்திய தமிழகம் உள்ளிட்ட தென் மாநில மாநிலங்கள் பாதிக்கப்படும் என, பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அனைத்தையும் மறைத்துவிட்டு, தி.மு.க.,வை மட்டும் சுட்டிக்காட்டுகிற பா.ஜ.,வின் போக்கை கண்டிக்கிறோம். இதில், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை குற்றஞ்சாட்டுவது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.