சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் கம்பெனியில் வெடி விபத்து; பெண் உட்பட ஐந்து பேர் காயம்
சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் கம்பெனியில் வெடி விபத்து; பெண் உட்பட ஐந்து பேர் காயம்
ADDED : மே 06, 2024 11:32 PM

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தயாரிப்பிற்கான அலுமினிய பேப்பர் சீவு துாள் கம்பெனியில் நடந்த வெடி விபத்தில் பெண் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.
சிவகாசி திருமேனி நகரைச் சேர்ந்தவர் சின்ன கருப்பு 44. இவருக்கு செங்கமலப்பட்டி அருகே காட்டுப்பகுதியில் இடம் உள்ளது. அங்கு தகர செட் அமைத்து பெரியாண்டவர் அலுமினியம் பேப்பர் சீவு துாள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வந்தார். இங்கு அலுமினியம் பேப்பர்களை எரித்து சட்டி, சக்கரம் தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருள் உற்பத்தி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் பெய்த மழையில் தகர செட் சேதம் அடைந்தது. எனவே இதனை சரி செய்வதற்கு வெல்டிங் பணி நடந்தது. அப்போது தீப்பொறி பறந்து விழுந்ததில் வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் சின்ன கருப்பு, விநாயகர் காலனி மகேந்திரன் 26, சதீஷ்குமார் 27, திருப்பதி நகர் அன்புராஜ் 27, மீரா காலனி வீரலட்சுமி 28, காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். டி.எஸ்.பி., சுப்பையா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் விவேகானந்தன் பார்வையிட்டனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
மற்றொரு விபத்து
சிவகாசி அருகே ஈஞ்சாரில் உள்ள தொழிற்சாலையில் மத்தாப்பு குச்சி வைக்கப்பட்டிருந்த அறையில் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் அறை சேதம் அடைந்தது. சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.