ADDED : ஜூன் 25, 2024 12:19 AM
சென்னை: சென்னை, கோவை, திருச்சி, கர்நாடக மாநிலம் கலபுரகி, குஜராத் விமான நிலையம் என, நாட்டில் உள்ள 100க்கும் மேற்பட்ட விமான நிலையங்களுக்கு, இ - மெயில் வாயிலாக நேற்று மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.
சென்னை, திருச்சி விமான நிலையங்கள் உட்பட பல்வேறு விமான நிலையங்களுக்கு, நேற்று காலை 6:50 மணிக்கு இ - மெயில் ஒன்று வந்தது. அதில், 'விமான நிலையத்தில் உள்ள கழிப்பறையில் உள்ள குழாயில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது; சிறிது நேரத்தில் வெடிக்கும்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து, சென்னை விமான நிலைய இயக்குனர் தலைமையில், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர், சி.ஐ.எஸ்.எப்., என்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள், விமான நிலைய போலீசார் பங்கேற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனைக்கு பின், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது.
இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே, விமான நிலையங்களுக்கு அதிகமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த மாதத்தில், சென்னை விமான நிலையத்திற்கு மட்டும், ஏழாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.