பத்திரப்பதிவு வருவாய் இலக்கு ரூ.60,000 கோடியாக உயர்வு?
பத்திரப்பதிவு வருவாய் இலக்கு ரூ.60,000 கோடியாக உயர்வு?
ADDED : மே 06, 2024 12:21 AM

சென்னை: பத்திரப்பதிவு வாயிலான வருவாயை, 60,000 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற உயரதிகாரி உத்தரவால், சார் - பதிவாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் பத்திரப்பதிவு வாயிலாக ஆண்டுக்கு, 12,000 கோடி முதல், 17,000 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டப்படுகிறது. இதன்படி, 2023 - 24ம் நிதியாண்டிற்கு, 20,000 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
பத்திரப்பதிவு பணிகளை விரைவுபடுத்துதல்; வழிகாட்டி மதிப்பு பிரச்னையை முடித்து, நிலுவை பத்திரங்களை பதிவு செய்வது என, வருவாய் இலக்கை அடைய, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இருப்பினும், 18,000 கோடி ரூபாய் அளவிற்கே வருவாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பதிவுத்துறையின் பொறுப்பு செயலராக, வணிக வரித்துறை ஆணையர் ஜெகநாதன் சமீபத்தில் பொறுப்பேற்றார்.
துறையின் பணிகளை ஆய்வு செய்த அவர், வருவாய் இலக்கு தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள், சார் - பதிவாளர்களை அலறவிட்டுள்ளது.
இதுகுறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது:
சந்தை நிலவரப்படி ரியல் எஸ்டேட் துறையில், வர்த்தக மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களின் கணக்கெடுப்பு அறிக்கைகள் அடிப்படையில், தமிழக ரியல் எஸ்டேட் வர்த்தக மதிப்பு, 10 ஆண்டுகளில், 300 மடங்கு அதிகரித்துள்ளது.
ஆனாலும், பத்திரப்பதிவு வருவாய், 10 ஆண்டுகளில், இரு மடங்காக கூட உயராதது ஏன் என, பதிவுத்துறையின் பொறுப்பு செயலர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதன்படி, பதிவுத்துறையின் வருவாய் இலக்கு, 60,000 கோடி ரூபாயாக இருக்க வேண்டும் என்கிறார்.
இதற்காக நில வழிகாட்டி மதிப்புகளை உயர்த்துவதற்கான பரிந்துரைகள் அனுப்ப, சார் - பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.