ADDED : மார் 28, 2024 01:39 AM

தென்காசி:தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இத்தொகுதியில் 7 வது முறையாக போட்டியிடுகிறேன். இத்தொகுதி அடைய வேண்டிய தேவைகள் அதிகம் உள்ளது. 1998ல் இருந்து போட்டியிடுகிறேன். இந்த தேர்தலில் தென்காசி மக்கள் எனக்கு பெருவாரியான ஓட்டுக்கள் அளித்து வெற்றி பெறச் செய்வார்கள்.
2019 லோக்சபா தேர்தலில் மக்கள் ஒரு வேட்பாளரை தேர்வு செய்து அனுப்பினார்கள்.அவர் இந்த ஊருக்காராக இருந்தாலும் கடந்த ஐந்தாண்டுகளாக தெருவில் நடக்கும் விழாவிற்கு கூட செல்லாதவர். இதற்காகவா 15 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தார்கள்.
குடிநீர் பிரச்னை தீராதா, வேலை வாய்ப்பு கிடைக்காதா, மேற்கு தொடர்ச்சி மலையில் கிடைக்கும் நீரை வீணாக்காமல் கிணறுகளை நோக்கி திருப்பி விட மாட்டார்களா என எண்ணி இத்தொகுதி மக்கள் வேதனைப்படுகிறார்கள். இப்பிரச்னைகளை நான் தீர்த்து வைப்பேன். இது என் வாழ்நாள் கடமை.
அ.தி.மு.க., தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., என கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
வரும் தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட பலமுறை தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளேன். எனக்கு சின்னம் ஒதுக்கி தரப்படவில்லை. எனக்கு மட்டுமல்ல.
என் போன்ற பல கட்சிகளுக்கு சின்னத்தை ஒதுக்க ஆணையம் மறுக்கிறது. ஒருதலை பட்சமாக செயல்படுகிறது. அதனால் அனைவருக்கும் அறிமுகமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறேன் என்றார்.

