ADDED : ஏப் 04, 2024 06:40 AM

கரூர் லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து, தோரணகல்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., பேசினார். அப்போது, அ.தி.மு.க., - அ.ம.மு.க., கட்சிகளில் இருந்து, தி.மு.க.,வுக்கு தாவிய, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து பேசினார்.
பின்னர், அ.தி.மு.க.,வில் இருந்த செந்தில் பாலாஜி குறித்து, முதல்வர் ஸ்டாலின் பேசியது, செந்தில் பாலாஜி, முதல்வர் ஸ்டாலினை விமர்சனம் செய்தது குறித்த பேச்சுக்கள் அடங்கிய வீடியோ தொகுப்பு, எல்.இ.டி., திரையில் ஒளிபரப்பப்பட்டது.
அதில் முதல் வீடியோவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 'அமைச்சராக உள்ள, கரூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் பாலாஜி, சசிகலாவுக்கு நெருக்கமாக, அதைவிட இளவரசிக்கு நெருக்கமாக இருப்பவர். அவர், இந்த மாவட்டத்தையே தன் கட்டுபாட்டுக்குள் வைத்துள்ளார். அவரது தம்பி அசோக்குமாரும் இதற்கு உடந்தை. கட்ட பஞ்சாயத்து, ஆள் கடத்தல் போன்ற சம்பவங்களில், செந்தில் பாலாஜியும், அசோக்குமாரும் ஈடுபடுகின்றனர்' என, பேசியுள்ளார்.
அதை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டசபையில் பேசியதும் ஒளிபரப்பானது. அதில், 'ஊழல் பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. கருணாநிதிக்கும், அவரது பிள்ளைகளுக்கும் ஒரு குணம் உண்டு. அவர்களுக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா' என, கேட்ட வீடியோவும் ஒளிபரப்பட்டது. இந்த இரண்டு வீடியோக்களையும் பார்த்த, அ.தி.மு.க.,வினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

