ADDED : மே 06, 2024 07:53 PM

மேட்டுப்பாளையம் ; சிறுமுகை அருகே பவானி ஆற்றில் மூழ்கி, அண்ணன் தம்பி சிறுவர்கள் இறந்தனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே திம்மராயம்பாளையம் உள்ளது. இங்கு லிங்கம்மாள் மூதாட்டி வசித்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் மாரிதுரை. இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு அபினேஷ் குமார், 10, அவினேஷ், 8 இரண்டு மகன்கள் இருந்தனர். நேற்று காலை தூத்துக்குடியில் இருந்து திம்மராயம்பாளையத்தில் உள்ள தனது பாட்டி லிங்கம்மாள் வீட்டிற்கு, இருவரும் வந்தனர். ஊரின் அருகே பவானி ஆற்றில் சிறிதளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் அப்பகுதி மக்கள் துணி துவைத்தும், குளித்தும் வருகின்றனர். நேற்று மதியம் அண்ணன், தம்பி இரண்டு சிறுவர்களும், ஆற்றுத் தண்ணீரில் குளிக்க சென்றனர். சிறிது நேரத்தில் ஆழமான பகுதியில் தண்ணீரில் இருவரும் மூழ்கினர். இதை பார்த்த துணி துவைத்தவர்கள், சத்தம் போடவே அங்குள்ள இளைஞர்கள், தண்ணீரில் இறங்கி அண்ணன் தம்பி இரண்டு சிறுவர்களையும் மேலே கொண்டு வந்த போது இறந்திருப்பது தெரிய வந்தது. இரண்டு சிறுவர்களை பார்த்த அக்கிரம மக்கள் சோகத்தில் மூழ்கினர் .
இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.