'கரும்பை பூஜித்தால் சர்க்கரை கிடைக்குமா? சக்கையாக பிழிந்து சாறை காய்ச்சினால் தானே பலன்!'
'கரும்பை பூஜித்தால் சர்க்கரை கிடைக்குமா? சக்கையாக பிழிந்து சாறை காய்ச்சினால் தானே பலன்!'
ADDED : ஆக 11, 2024 05:46 AM

சென்னை: ''அவரவர் சக்திக்கு ஏற்றபடி தர்மத்தை கடைப்பிடிக்கும் வழிகளை, ஜகத்குரு ஆதிசங்கரர் காண்பித்துள்ளார். ஜாதி, மத வித்தியாசமின்றி உலகில் வசிக்கும் அனைவரும் அவரின் உபதேசங்களை கடைப்பிடித்தால் நல்வழி கிடைக்கும்,'' என, சிருங்கேரி மடத்தின் பீடாதிபதி விதுசேகர பாரதீ சன்னிதானம் அருளாசி வழங்கினார்.
ஆதிசங்கரர் தோற்றுவித்த நான்கு ஆம்னாய பீடங்களில் முதன்மையானதானது சிருங்கேரி சாரதா பீடம். இப்பீடத்தின், 37வது பீடாதிபதி ஜகத்குரு விதுசேகர பாரதீ சன்னிதானம். அவரின், 32வது ஜெயந்தி விழா, 9ம் தேதி கொண்டாடப்பட்டது.
அதில், விதுசேகர பாரதி சன்னிதானம் அருளாசி வழங்கியதாவது:
நாம் செய்யும் தர்மமும், அதர்மமே நமக்கு வரக்கூடிய சுக, துக்கத்திற்கு காரணம். இது, எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரு தர்மம்.நல்வழி கிடைக்கும்
சுக, துக்கத்தை அனுபவிக்கக் கூடிய வழி தான் மாறி இருக்கலாமே தவிர, அது நாம் செய்யும் தர்ம, அதர்மத்தின் அடிப்படையில் தான் ஏற்படுகின்றன.
வரும் பிறப்பிலும் நன்றாக இருக்க வேண்டும் என்றால், இப்போது தர்மத்தினை அவசியம் செய்ய வேண்டும். அவரவர் சக்திக்கு ஏற்றபடி தர்மத்தை கடைப்பிடிக்கும் வழிகளை, ஜகத்குரு ஆதிசங்கரர் காண்பித்துள்ளார். ஜாதி, மத வித்தியாசமின்றி, உலகில் வசிக்கும் அனைவரும் அவரின் உபதேசங்களை கடைப்பிடித்தால் நல்வழி கிடைக்கும்.
கடைசியில் நன்மை
கரும்பிலிருந்து சர்க்கரை எடுக்க, அதை பூஜித்தால் வராது. இயந்திரத்தில் பிழிந்து வரும் ரசத்தில் இருந்து தான் சர்க்கரை தயாரிக்க முடியும். அதேபோல, தர்மத்தை நாம் பின்பற்றினாலும் நமக்கு ஏற்படும் சில கஷ்டங்கள், கடைசியில் நன்மையில் தான் கொண்டு முடியும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு அருளாசி வழங்கினார் சிருங்கேரி மடத்தின் தலைமை அதிகாரி முரளி பேசுகையில், மகாசன்னிதானத்தின், 50வது சன்னியாச ஸ்வீகார வருடத்தினை முன்னிட்டு, நடத்தப்பட்ட நிகழ்வுகளை நினைவு
கூர்ந்தார்.
நுால்களை வாங்கலாம்
இவ்விழாவின் ஒரு பகுதியாக, சகஸ்ர மோதக கணபதி ஹோமம், கால பைரவ சுவாமி பூஜை மற்றும் அக்கோவிலில் புதிய வெளிப்பிரகார மண்டபம் திறப்பு விழா, மஹா ருத்ரம், விசேஷ ஸ்ரீ சந்திர மவுலீஸ்வர பூஜை ஆகியவை நடந்தன. ஸ்ரீ சாரதா பீடத்தின் நுால்களை, books.sringeri.net என்ற இணைய முகவரியில், 'ஆன்-லைன்' வாயிலாக வாங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

