ADDED : ஜூலை 07, 2024 12:43 AM

மயிலாடுதுறையில் பெரிய கோவில் எனப்படும், அபயாம்பிகை உடனுறை மாயூரநாதர் கோவிலின் நான்கு பெரிய வீதிகளை சுத்தம் செய்தபடியே, திருஞானசம்பந்தர் பாடிய தேவார பாடலை, வசன வரிகளாக பாடும், நகராட்சியின் ஒப்பந்த துாய்மை பணியாளர் மீனாட்சி:
என் கணவர் செல்வம், நாகை நகராட்சியில், பொது சுகாதார உதவியாளராக நிரந்தர பணியில் இருக்கிறார். கடந்த ஒன்பது ஆண்டு களாக இந்த பணியை செய்து வருகிறேன். நான்கு பெரிய வீதிகளும் நான் சுத்த செய்ய வேண்டிய பகுதி. அப்போதெல்லாம் கடவுள் மேல் பெரிய அளவில் பக்தி இருந்ததில்லை.
ஆனால், 'இந்த கோவிலில் சாமி கும்பிட, தினமும் ஆயிரக் கணக்கில் மக்கள் வருகின்றனர் எனில், இந்த சாமி எத்தனை பேரோட வேண்டுதல்களை தீர்த்து வெச்சிருப்பார்... அவரை நாம் ஏன் அசட்டை செய்றோம்' என தோன்ற, என்னையும் அறியாமல் ஒரு ஈடுபாடு ஏற்பட துவங்கிவிட்டது.
அதன்பின், கோவிலின் வரலாற்றையும், பெருமைகளையும் தெரிந்தபின், கோவில் வீதிகளை சுத்தம் செய்யும் வேலையை, இன்னும் அர்ப்பணிப்புடன் செய்ய துவங்கினேன்.
ஆறு ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள், 'தினமும் கோவில் வீதியை சுத்தம் செய்தால் மட்டும் போதுமா... இறைவன் மனதில் இடம்பிடிக்க வேண்டாமா' என்றும் தோன்றியது.
'உன் வேலையை மெச்சி சாமி உனக்கு காட்சி தரணும்னு எதிர்பார்க்குறியாக்கும்?' என, கிண்டல் செய்தார் கணவர். 'அவர் காட்சி தர வேண்டாம்; நாம் அவரை அடையலாமே...' என்று கூறி, அதற்கு என்ன செய்யலாம் என, யோசிக்க துவங்கினேன்.
'நான் 10ம் வகுப்பு முடித்து 28 ஆண்டுகள் ஆகி விட்டது. இனி புத்தகங்கள் வாங்கி மனப்பாடம் செய்ய முடியுமா' என, தயக்கம் ஏற்பட்டது; கூடவே, கொடுத்த வேலையை பார்க்காமல், கோவிலுக்குள் சென்று உட்கார்ந்து பாடினால், வீட்டுக்கு அனுப்பிடுவாங்களே என, தடுமாறினேன்.
அதன்பின் தான், வேலை பார்த்தபடியே தேவாரப் பாடல்களை பாடலாம் என, முடிவெடுத்தேன். அதனால், வேலைகளை முடித்து விட்டு, இரவு நேரத்தில், திருஞான சம்பந்தரின் தேவாரப் பதிகங்களை படித்து, மனப்பாடம் செய்து, வேலை பார்க்கும் போதெல்லாம் பாடத் துவங்கினேன். -
துவக்கத்தில், நான் வாய்விட்டு பாடியபடியே தெருவை சுத்தம் செய்வதை யாராவது பார்த்தால், சங்கோஜமாக இருக்கும்; உடனே நிறுத்தி விடுவேன்.
ஆனால், தற்போதோ, நான் வாயை மூடிட்டு வேலை செய்வதை பார்த்தால், 'எதுவும் பாட்டு பாடலையா?' என, பொதுமக்கள் கேட்டு செல்கின்றனர்.
திருஞான சம்பந்தர் பதிகங்களை சொல்ல துவங்கினாலும், அதை எந்த கோவிலில் பாட வேண்டும் என எனக்கு தெரியாது. இப்போதெல்லாம், என்னால் ஒரு நாள் கூட பாடாமல் இருக்க முடிவதில்லை.
தொடர்புக்கு:
9488918773.