கடலுக்குள் கார்பன்- டை- ஆக்சைடை திட வடிவில் சேமிக்கலாம்: ஐ.ஐ.டி., தகவல்
கடலுக்குள் கார்பன்- டை- ஆக்சைடை திட வடிவில் சேமிக்கலாம்: ஐ.ஐ.டி., தகவல்
ADDED : ஏப் 30, 2024 06:03 AM

சென்னை : 'தொழில் துறை வளர்ச்சியால், கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து, பூமி பாதிப்புக்குள்ளாகும் நிலையில், கார்பன்- டை- ஆக்சைடை, கடலுக்குள் திட வடிவில் சேமித்தால் பாதிப்பு குறையும்' என, சென்னை ஐ.ஐ.டி., ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தொழிற்துறை வளர்ச்சியால், 40 ஆண்டுகளில் தொழிற்சாலைகளில் இருந்து கார்பன்- டை- ஆக்சைடு உமிழ்வு, 5 ஜிகா டன் அளவில் இருந்து, ஆண்டுக்கு, 9.9 ஜிகா டன் அளவுக்கு உயர்ந்து உள்ளது.
நகரமயமாக்கல், காடுகள் அழிப்பு, கட்டுமான அதிகரிப்பு ஆகியவற்றாலும், கார்பன்- டை- ஆக்சைடு அதிகரித்துள்ளது. இது, 2050ம் ஆண்டுக்குள், 1,100 ஜிகா டன்னாக உயரக்கூடும் என்பதால், அதனை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை.
எனவே, கார்பன்- டை- ஆக்சைடு பூமியை பாதிக்காமல் இருக்க, பூமியை விட 2 மடங்கு அளவில் இருக்கும் கடலை தவிர வேறு வாய்ப்பு இல்லை.
எனவே, இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி.,யின் கெமிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் ஜிதேந்திர சங்காவ், ஆராய்ச்சி அறிஞர் யோகேந்திர குமார் மிஸ்ரா ஆகியோரது குழு ஆராய்ச்சி நடத்தியது.
இதில், கார்பன்- டை- ஆக்சைடை கடலில் குறைந்த ஆழத்தில் அப்படியே சேமித்தால், கடல்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு ஏற்படும் என்பது கண்டறியப்பட்டது.
அதேநேரம், கடலில், 2,800 மீட்டர் ஆழத்தில், கார்பன்- டை- ஆக்சைடு திரவம், கடல் நீரை விட அடர்த்தியாக இருக்கும். அதனால், திடஹைட்ரேட் வடிவில் கார்பன்- டை- ஆக்சைடை, கடலுக்கு அடியில் நிரந்தரமாக சேமிக்க முடியும் என, தெரியவந்துள்ளது.
கடல் வண்டல்களின் ஈர்ப்பு மற்றும் ஊடுருவக்கூடிய தடையின் காரணமாக, வளிமண்டலத்தில் எந்தவித வெளியேற்றத்தையும், திடஹைட்ரேட் அனுமதிக்காது.
கடலுக்கு அடியில் உள்ள களிமண் படிவங்கள், வாயு ஹைட்ரேட்டுகளின் இயந்திர மற்றும் வெப்ப நிலைத் தன்மையை மேம்படுத்தும் என்பதும், ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

