ஜாதிக்காய் சாகுபடியை மேம்படுத்த 'கேர் அண்டு க்யூர் சென்டர்' துவக்கம்
ஜாதிக்காய் சாகுபடியை மேம்படுத்த 'கேர் அண்டு க்யூர் சென்டர்' துவக்கம்
ADDED : மார் 09, 2025 02:22 AM

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, ஆனைமலை, கோட்டூர் மற்றும் தமிழக எல்லையோர கிராமங்களில், தென்னையில் ஊடுபயிராக ஜாதிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது.
கேரள மாநிலத்தை விட, ஆனைமலை பகுதிகளில் விளைவிக்கப்படும் ஜாதிக்காய், ஜாதிபத்ரி உயர்தரமாக உள்ளதால், ஏற்றுமதியாளர்கள் போட்டி போட்டு நல்ல விலைக்கு வாங்கிச் செல்கின்றனர்.
ஆண்டுதோறும், ஜூன் முதல் நவம்பர் வரை ஜாதிக்காய் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.
கோட்டூரில், 'பொள்ளாச்சி ஜாதிக்காய் உற்பத்தியாளர் நிறுவனம்' துவக்கப்பட்டு, விளைபொருளை தரம் பிரித்து, விலை நிர்ணயம் செய்து, வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், மத்திய அரசின் நறுமண பொருட்கள் வாரியம் வாயிலாக, 2 லட்சம் ரூபாய் மானியத்தில் கோட்டூரில், 'கேர் அண்டு க்யூர் சென்டர்' எனப்படும், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மையம் துவங்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தை, ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுதாலட்சுமி, வாரியத்தின் மண்டல அலுவலர் கனக திலிபன் துவக்கி வைத்து, விவசாயிகளுக்கு பயோ இடுபொருட்களை வழங்கினர்.
தொடர்ந்து, நறுமண பொருட்கள் வாரியத்தின் ஈரோடு மண்டல அலுவலகம் வாயிலாக, ஜாதிக்காய் தர மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது.