ADDED : ஆக 09, 2024 12:50 AM

சென்னை: ஜாமின் நிபந்தனையை பூர்த்தி செய்ய சென்றபோது, முதல்வர், அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதாக, முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு எதிராக பதிவான வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலின்போது, கள்ள ஓட்டு போட முயன்ற தி.மு.க., பிரமுகரை, அரை நிர்வாணமாக்கி தாக்கியதாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது செய்யப்பட்டார்.
திருச்சியில் தங்கியிருந்து கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன், அவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
திருச்சியில் கையெழுத்திட சென்றபோது, அ.தி.மு.க.வினர் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கூடி, தி.மு.க., அரசையும், முதல்வரையும் கண்டித்து கோஷம் எழுப்பியதாக, மற்றொரு வழக்கு, ஜெயகுமார் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் ஜெயகுமார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து, ஜெயகுமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, ஜெயகுமாருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.