த.வெ.க., விஜய்க்கு இனிதான் வேலையே! ஆனா... லிஸ்ட் பெரிசா இருக்கே!
த.வெ.க., விஜய்க்கு இனிதான் வேலையே! ஆனா... லிஸ்ட் பெரிசா இருக்கே!
UPDATED : செப் 08, 2024 12:53 PM
ADDED : செப் 08, 2024 12:42 PM

சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் பதிவு செய்துவிட்ட நிலையில் அடுத்த அவர் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றிய பேச்சுகள் அரசியல் களத்தில் எழ ஆரம்பித்து இருக்கின்றன.
தேர்தல் ஆணையம்
கட்சி ஆரம்பிக்க போகிறேன், தேர்தலை சந்திக்கப்போகிறோம் என்று நடிகர் விஜய் அறிவித்த நாளில் இருந்த சந்தோஷத்தை விட இன்று அக்கட்சிக்கும், தொண்டர்களுக்கும் உத்வேக நாளாக அமைந்திருக்கிறது. த.வெ.க., இனி அரசியல் கட்சி என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது. விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடத்த காவல்துறையும் 33 நிபந்தனைகளுடன் அதிகாரப்பூர்வ அனுமதி அளித்துவிட்டது.
அறிக்கை, பட்டியல்
அரசியல் கட்சி பதிவு, தேர்தல் ஆணையம் அறிவிப்பு, மாநாடு அனுமதி எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். தடைகளை தகர்த்து எறிந்து வலம் வருவோம் என்று விஜய்யின் அறிக்கை வெளியாக அவர் முன் தற்போதுள்ள சவால்கள் என்ன என்பது பற்றிய பேச்சுகள் பொதுவெளியில் பெரிய பட்டியலாக எழ ஆரம்பித்து உள்ளன.
கேள்விகள்
முதலில் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது தான் அரசியல் விமர்சகர்களின் திடமான கேள்வியாக இருக்கிறது. அடிப்படையான கொள்கை என்ன? எந்த பொருளை வலிமையாக முன் வைத்து கட்சி நடத்தப்படும் என்பது கட்சி தொண்டர்களுக்கே இன்னும் பிடிபடாத விஷயமாக உள்ளது.
மொழி,மதம்
மக்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்னையிலும் விஜய்யின் பார்வை, அதில் அவரின் அணுகுமுறை எப்படி இருக்கப்போகிறது என்பதை எல்லோரும் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
கட்சி தலைவர் என்றால், சமகால பிரச்னைகள், காலம் காலமாக உள்ள பிரச்னைகள் குறிப்பாக மொழி, மதம் மற்றும் சாதி சார்ந்தவை, கச்சத்தீவு விவகாரம், குடும்ப அரசியல், ஊழலுக்கான எதிரான நிலைப்பாடு, நீட் தேர்வு விவகாரம், பெட்ரோலிய பொருள் விலையேற்றம், எய்ம்ஸ், ஜி.எஸ்.டி., நதிநீர் பிரச்னைகள், விலைவாசி உயர்வு ஆகியவற்றில் பலப்பல கேள்விகளை விஜய் கடந்து செல்ல வேண்டியிருக்கும். அதற்காக ஏகப்பட்ட ஹோம் ஒர்க் செய்ய வேண்டியிருக்கும்.
திராவிட எதிர்ப்பு அரசியல்
இன்னமும் ஒன்றரை ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தமிழகம் தயாராக உள்ளது. இந்த காலகட்டத்தில் விஜய் செய்யும் அரசியல், திராவிட கட்சிகளுக்கு எதிராக இருக்குமா? அல்லது அவர்களின் இருப்பை சார்ந்தே தமது திட்டத்தையும் வகுத்துக் கொள்வாரா? த.வெ.க., தமிழக அரசியல் களத்தில் என்ன செய்யும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கிறது.
கூட்டணி
தாம் களத்தில் இருக்கும் திரைத்துறையில் அவரது பங்களிப்பு, அங்குள்ள பிரச்னைகளை அவர் அணுகி தீர்வு காண்பாரா? அரசியலில் தனி ஆவர்த்தனமா? அல்லது கூட்டணியா? எனவும் கேள்விகளை பலரும் முன் வைக்கின்றனர்.
எதிர்வினை எப்படி இருக்கும்
கட்சியில் நிர்வாகிகள் என யாரை, எப்படி நியமிக்கப்போகிறார்? கோஷ்டி பூசல் வந்தால், மாற்றுக் கட்சிகளில் இருந்து அரசியல் பிரமுகர்கள் த.வெ.க.வில் இணைந்தால் எப்படி ரியாக்ட் செய்வார்? சமூக அவலங்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு நேரில் வந்து குரல் கொடுப்பாரா? அல்லது அறிக்கை அரசியல் தானா? என்று சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பி தள்ளுகின்றனர். விஜய் முன் உண்மையாகவே ஆயிரம் ஆயிரம் கேள்விகளும், எதிர்பார்ப்புகளும் லைன் கட்டி நிற்கின்றன.
மாநாடு உரை
கட்சி ஆரம்பிப்பது கடினமல்ல, அதை நடத்துவதில் தான் இருக்கிறது சூட்சுமம். அனைத்திலும் விஜய் என்பவர் த.வெ.க., தலைவராக பரிமளிப்பாரா அல்லது நடிகராக காட்சி தருவாரா என்பது மில்லியன் டாலர் கேள்விதான். அனைத்திற்கும் மாநாட்டின் முதல் உரையில் நடிகர் விஜய்யிடம் பதில் இருக்கும் என்பது தான் த.வெ.க., தொண்டர்கள் எதிர்பார்ப்பு!